தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் நாளை (மார்ச் 18) மாலை பிரம்மாண்டமான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியான 4 பாயிண்ட் ஷெரட்டனில் மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 இஸ்லாமியப் பெரியவர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இந்த இஃப்தார் விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் தவெக-வின் மதச்சார்பற்ற கொள்கைகள் குறித்து விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "எந்தச் சிக்கலாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்" என்ற உறுதியை அவர் முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கக் கட்சியின் சார்பில் QR கோடு அடங்கிய பிரத்யேக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தைப் பிரதானக் கொள்கையாகக் கொண்ட தவெக, ஏற்கனவே மாமல்லபுரத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் மகளிர் தின விழாக்களை நடத்தியுள்ளது. தற்போது ரம்ஜான் மாதத்தில் இஃப்தார் விருந்து அளிப்பது, சிறுபான்மையின வாக்குகளை ஒருங்கிணைக்கும் தவெகவின் முக்கியத் தேர்தல் உத்தியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!
நேற்றுதான் (மார்ச் 15) அதிமுக சார்பில் சென்னையில் இஃப்தார் விருந்து நடத்தப்பட்ட நிலையில், நாளை தவெக சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!