வரலாறு காணாத கொடூர சூறாவளி ‘மெலிசா’வின் மையப் பகுதி (கண்) உள்ளே அமெரிக்க விமானப்படை விமானம் பறந்து, அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. 5-ஆம் நிலை தீவிரம் கொண்ட இந்தப் புயல், மணிக்கு 282 கி.மீ. வேகத்தில் கரிபியன் கடலில் சீறி வருகிறது. ஜமைக்காவின் தென்மேற்கு கடற்கரையைத் தாக்கியதில், 7 பேர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தேசிய சூறாவளி மையம் (NHC) இதை “இந்த நூற்றாண்டின் மிக வலிமையான புயல்” என வகைப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) அதிகாலை, புயலின் ‘கண்’ பகுதியை நோக்கி WC-130J ‘ஹரிகேன் ஹண்டர்’ விமானம் பறந்தது.
சூரிய உதயத்துடன் தொடங்கிய இந்தப் பயணத்தில், புயலின் மையத்தில் கால்பந்து மைதான அளவுக்கு குழிந்த வட்ட வடிவ ‘கண்’ தெரிந்தது. பல கிலோமீட்டர்களுக்கு மேகங்கள் உள்ளிழுக்கப்பட்டு, சுற்றி சுவர் போன்ற மேகக் கோபுரங்கள் நின்றன. கடல் அலைகள் ராட்சத அலைகளாக எழுந்தன.
இதையும் படிங்க: வரலாற்றியே அதிக சக்தி வாய்ந்த புயல்! ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா! நடுங்கும் கியூபா!

வீடியோவில், விமானம் புயலின் கண்ணுக்குள் நுழையும் போது வேகம் மணிக்கு 282 கி.மீ. ஆக இருந்தது. “இதுவரை பார்த்த மிக ஆக்ரோஷமான கண்” என விமானப்படை விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தத் தரவுகள், புயலின் தீவிரத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.
மெலிசா புயல் ஜமைக்காவின் மான்டெகோ விரிகுடா அருகே கரையைத் தொட்டது. 13 அடி உயர அலைகள், 40 அங்குலம் (1 மீட்டர்) வரை மழை கொட்டியது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் வீடுகள் இடிந்தன; மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர் (3 ஜமைக்கா, 4 ஹைதி மக்கள்). ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ், “இது 174 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்” எனக் கூறினார். 800 முகாம்களில் மக்கள் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
புயல் தற்போது 4-ஆம் நிலைக்கு வலுவிழந்து, கியூபாவை நோக்கி நகர்கிறது. குவாண்டனாமோ, சாண்டியாகோ பகுதிகளில் 6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, கனடா உதவி அனுப்ப தயாராக உள்ளன. வல்லுநர்கள், “காலநிலை மாற்றத்தால் புயல்கள் வேகமாக வலுப்பெறுகின்றன. மெலிசா அதற்கு உதாரணம்” என எச்சரிக்கின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இதையும் படிங்க: மேற்கு எல்லை விவகாரம்: பிரச்னையை முடிக்க தொடர்ந்து பேசுவோம்.. இந்தியா-சீனா பரஸ்பரம் ஒப்புதல்..!!