வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடும் பாதுகாப்பு எல்லைகளைக் கடந்து ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளார். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்துவதாகவும், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை மீட்டெடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிற்குள் குடியேறுவதை, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை தனது சொந்த சமூக ஊடகக் கணக்கான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டார். அமெரிக்க அதிபரின் நடவடிக்கை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும்.
அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ள நிலையில், குடியேற்றக் கொள்கைகள் அந்த முன்னேற்றத்தைத் தடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதாக டிரம்ப் கூறினார். "மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்தி வைப்பேன். அமெரிக்கப் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற, அமெரிக்காவிற்கு பயனளிக்காதவர்களை, நம் நாட்டை நேசிக்காதவர்களை நாடு கடத்த, வெளிநாட்டினருக்கு அரசு சலுகைகள் மற்றும் மானியங்களை நிறுத்த இந்த நடவடிக்கைகளை எடுப்பேன். நாட்டின் அமைதியைக் குலைப்பவர்களை குடியுரிமையிலிருந்து நீக்க, பொதுச் சுமையாக, பாதுகாப்பு அச்சுறுத்தலாக அல்லது மேற்கத்திய நாகரிகத்திற்கு பொருந்தாத வெளிநாட்டினரை நாடு கடத்த இந்த நடவடிக்கைகளை எடுப்பேன்," என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: டிரம்ப்-மம்தானி சந்திப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சசி தரூர்... காங்கிரஸுக்கு விழுந்த சம்மட்டி அடி...!
"இந்த இலக்குகளை அடைவதன் முக்கிய நோக்கம் சட்டவிரோதமான, விரும்பத்தகாத மக்கள்தொகையைக் கணிசமாகக் குறைப்பதாகும். இதற்கு ஒரே தீர்வு 'தலைகீழ் இடம்பெயர்வு' ஆகும். அமெரிக்காவை வெறுப்பவர்கள், திருடுபவர்கள், கொலை செய்பவர்கள் மற்றும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுபவர்கள் நீண்ட காலம் இங்கு இருக்க மாட்டார்கள்!" என்று டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26 அன்று வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தில் சந்தேக நபரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் கைது செய்யப்பட்டார். கடந்த காலங்களில் குடியேற்றம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகமும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சந்தேக நபர் ஆப்கானிய நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட உடனேயே, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அந்த நாட்டின் குடிமக்களுக்கான விண்ணப்பங்களை செயலாக்குவதை காலவரையின்றி நிறுத்தி வைத்தன. "எங்கள் நாட்டின் மற்றும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புதான் எங்கள் ஒரே குறிக்கோள்" என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஃபுட்பால் விளையாடினாரா அதிபர் டிரம்ப்..!! அதுவும் யார் கூட தெரியுமா..?? வைரலாகும் வீடியோ..!!