பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி பல ஏழைச் சிறுமிகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி தவறான முறையில் நடந்துகொண்டதாகச் சொல்லப்படும் இத்தகைய சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்த போக்சோ வழக்கை முடித்துவைக்க காவல்துறை ஏற்கெனவே முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே மீண்டும் விசாரணை தீவிரமடைந்திருப்பது பல கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவியவர்கள், உண்மைகளை மறைக்க அல்லது விசாரணையைத் திசைதிருப்ப முயன்றவர்கள் என யாரேனும் இருந்தால், அவர்களது பங்கும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், எஃப்.ஐ.ஆரில் பெயர் சேர்க்காமல் இருக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருப்பது திடுக்கிட வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதிசெய்து, அவர்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், இவ்விவகாரத்தில் திமுகவும் ஆளுங்கட்சியான தவெகவும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக்கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: "வேலியே பயிரை மேய்ந்தது போல"..! வளர்ப்பு மகளை சீரழித்த போலீஸ்... வெட்கக்கேடு.! விளாசிய வானதி சீனிவாசன்..!
இவ்வழக்கில் தமிழக அரசு துரிதமாகவும் வெளிப்படையாகவும் விசாரணையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் நிர்வாக மாற்றம் எதற்கு.? பதில் சொல்லுங்க CM..! வானதி சீனிவாசன் கேள்வி.!!