சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக மாற்றம் தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தின் தற்போதைய ஏ.ஏ.ஐ. நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
2024-25 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்த விமான நிலையம் சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் திகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக ஏ.ஏ.ஐ. ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக வருவாய் ஈட்டி, சரக்குகள் மற்றும் பயணிகளைச் சிறப்பாகக் கையாளும் ஏ.ஏ.ஐ. நிர்வாகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், இதுகுறித்து மக்களுக்குத் தெளிவான விளக்கத்தை முதல்வர் தரப்பிலிருந்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட இந்தக் கடிதம் இப்போது வெளிவந்திருப்பதில் காலதாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!
ஏற்கனவே பரந்தூர் திட்டத்தை ரத்து செய்து தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய அரசு, இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைப்பது மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், பொதுத்துறை முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். முதல்வர் அனுப்பிய இந்தக் கடிதத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் எத்தனை குற்றங்கள்.? சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆதங்கத்தை கொட்டிய வானதி சீனிவாசன்..!!