விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2007ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த விருது வழங்கும் மரபு, சமூக நீதி, சமத்துவம், மொழிப் பற்று ஆகியவற்றை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகளை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார். இதில், “அம்பேத்கர் சுடர்”, “பெரியார் ஒளி”, “காமராசர் கதிர்”, “அயோத்திதாசர் ஆதவன்”, “காயிதேமில்லத் பிறை”, “செம்மொழி ஞாயிறு” மற்றும் 2022 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட “மார்க்ஸ் மாமணி” விருதுகள் இடம்பெற்றுள்ளன.
விருது பெறுபவர்கள்:
• அம்பேத்கர் சுடர்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கே. சொக்கலிங்கம். கல்வித்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
• பெரியார் ஒளி: மனித உரிமைப் போராளியும், சமூக செயற்பாட்டாளருமான முத்த வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன்.
• மார்க்ஸ் மாமணி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன்.
• காமராசர் கதிர்: அய்யா வைகுண்டர் பாதையில் சமயச் சீர்திருத்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும் பால. பிரஜாபதி அடிகளார்.
• அயோத்திதாசர் ஆதவன்: தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமா.
• காயிதேமில்லத் பிறை: இந்திய தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் முகமது முனீர்.
• செம்மொழி ஞாயிறு: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர் பொ. வேல்சாமி.
இதையும் படிங்க: அமைச்சரவையில் திருமா..? நிலைப்பாடு என்ன..? விசிக தலைவர் நச் பதில்..!!

இதுவரை முத்தமிழறிஞர் கலைஞர், மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், சித்தாராமையா, கி.வீரமணி, அருந்ததி ராய், து.ராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விருது வழங்கும் விழா, இப்போது ஜூலை 5ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்த விருதுகள் மூலம் சமூக நீதி, மொழிப் பாதுகாப்பு மற்றும் மானுட உரிமைப் போராட்டங்களுக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளிக்கும் விசிக-வின் முயற்சி பாராட்டத்தக்கது.
இதையும் படிங்க: விசிக-வில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்!! அதிருப்தியாளர்களுக்கு தடை போட்ட மு.க.ஸ்டாலின்! கறார்!