திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) போட்டியிடும் 8 சட்டமன்றத் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

விசிக போட்டியிடும் 8 தொகுதிகளின் பட்டியல்:
காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), பண்ருட்டி, திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி)
இதையும் படிங்க: இரட்டை இலக்க தொகுதிகள், எம்.பி சீட்! திமுக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக தீர்மானம்!
விசிக இந்த 8 தொகுதிகளிலும் தனது சொந்தச் சின்னமான பானை சின்னத்திலேயே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சட்டப்பூர்வ அனுமதியைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி கோரியுள்ளது.
இப்பட்டியலில் 6 தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும், திருப்போரூர் மற்றும் பண்ருட்டி ஆகிய 2 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும் உள்ளன. விசிக-வின் கோட்டையாகக் கருதப்படும் காட்டுமன்னார்கோவில் மற்றும் செய்யூர் ஆகிய தொகுதிகள் மீண்டும் அக்கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளன.
திருமாவளவன் அவர்கள் முன்னதாகக் குறிப்பிட்டது போல, புதுச்சேரியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டதில் உடன்பாடு இல்லாததால், அங்கு விசிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த 8 தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்க விசிக தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: "கேப்டனின் கனவை நனவாக்கிய ஸ்டாலின்" - எல்.கே. சுதீஷ் எம்பி நெகிழ்ச்சிப் பேட்டி!