கொடைக்கானல் மலைப்பகுதியில் பெருமளவில் பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இயற்கையின் அரணாக விளங்கும் கொடைக்கானல் மலையைச் சிதைத்துக் கல் எடுப்பது வளர்ச்சியா அல்லது அழிவுக்கான தொடக்கமா என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குவாரிப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தால், அதன் எல்லை, காலக்கெடு, வெட்டியெடுக்கப்பட வேண்டிய கனிமத்தின் அளவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். அனுமதிக்கப்பட்ட பரப்பைத் தாண்டிப் பணிகள் நடைபெறுகின்றனவா, நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா, இயற்கையான நில அமைப்பில் ஆபத்தான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும். இவற்றின் உண்மை நிலையை அரசு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாகக் கனிமங்கள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநில அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கொடைக்கானல் மலைத்தொடரில் அதிகாரிகளின் கண்காணிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது என வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.கனமழை பெய்து நிலச்சரிவு அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப் போகிறோமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 14,707 ஏக்கர் நெல் விவசாயம் கேள்விக்குறி... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்... கண்டுகொள்வாரா சி.எம். விஜய்?
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மிக அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். இயற்கைச் சமநிலையைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்து முறையான அறிவியல் ஆய்வு நடத்தாமல் தொடர்ந்து அனுமதிப்பது, எதிர்காலத்தில் மீள முடியாத பேரிடரை உருவாக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாகக் கள ஆய்வு நடத்தி, அனுமதி ஆவணங்கள் மற்றும் குத்தகை நிபந்தனைகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!