மயிலாடுதுறை கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை விரிவுபடுத்தும் முயற்சி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் சூழலியலையும் அழிக்கும் செயல் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக் கடலில் ஏற்கனவே 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வரும் PY-3 எண்ணெய் வயலை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பகுதியில் மேலும் ஐந்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார். 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எண்ணெய் வயலில் 2011ஆம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 மே மாதம் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முயல்வது அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடல் என்பது வெறும் கச்சா எண்ணெய் எடுக்கும் களம் மட்டுமல்ல. இலட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களின் உயிர்நாடி என்று வலியுறுத்திய வேல்முருகன், கடலுக்குள் தொடர்ந்து கிணறுகள் தோண்டுவதால் கடல் சூழலியல், பவளப்பாறைகள் மற்றும் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய தீவிரப் பாதிப்புகளை முழுமையாக மதிப்பிடாமல் இத்தகைய திட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது என்றார். ஏற்கனவே பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மீனவர்களும் பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒருபுறம் மக்கள் வாழ்வுரிமைக்காகக் களத்தில் நிற்கும்போது, மறுபுறம் மயிலாடுதுறை கடற்பரப்பில் மேலும் ஐந்து கிணறுகளுக்கு அனுமதி கோருவது மக்களை வஞ்சிக்கும் செயல் என்று அவர் கூறினார்.எளிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதா அல்லது பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கு வழிவகுப்பதா என்ற கேள்வியை மீனவ மக்கள் முன்வைக்கின்றனர் என்று வேல்முருகன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் மலைப் பகுதியில் கற்கள் உடைப்பு..! அலட்சியம் வேண்டாம்... வேல்முருகன் எச்சரிக்கை..!!
தமிழக அரசு இதில் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ள இந்த அனுமதி விண்ணப்பத்தை நிராகரிக்கத் தேவையான உறுதியான அழுத்தத்தை அரசு கொடுக்க வேண்டும். மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் வழியே எந்தவொரு தடையின்மைச் சான்றிதழும் வழங்கப்படக் கூடாது என்றார் அவர்.கடல் வளம் அழிந்த பின் நிவாரணம் வழங்குவது தீர்வாகாது. அதை முன்கூட்டியே பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை என்று வலியுறுத்திய வேல்முருகன், மயிலாடுதுறை கடலில் ஐந்து புதிய கிணறுகள் அமைக்கும் ஹார்டி நிறுவனத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றார். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் தராமல், கடல் சூழலியலையும் மீனவர் வாழ்வுரிமையையும் பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கடனுக்காக தாய், சேய் உயிர் போகணுமா.? கொத்தடிமை முறை அடையாளமா.? ஆதங்ககத்தைக் கொட்டிய வேல்முருகன்.!!