தமிழர்கள் படுகொலைக்கு, நீதி கேட்டால் ஆணவப் பேச்சா என்றும் கர்நாடக முதலமைச்சரே, இரட்டை வேடம் ஏன் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதை விசாரிப்பதற்குப் பதிலாக, தமிழகத்திலிருந்து எழும் நீதிக்குரலை அடக்க முயலும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் ஆணவப் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பாக தெரிவித்தார்.
மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று குடும்பங்கள் நிராதரவாகியிருக்கின்றன. ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.சம்பவம் குறித்து அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு தனது வேலையைப் பார்க்கட்டும் என்று தெரிவித்தார். கர்நாடக நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற பொருளில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசுவது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அரசியல் திமிராகவே பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்பகுதிக்குச் சென்றார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தினார்களா? கைது செய்யும் வாய்ப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை?
இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய கர்நாடக அரசு, எங்கள் மாநில விவகாரம் என்று கதவை மூடிக்கொள்வது ஏன்? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார். தமிழர்களின் மரணத்தைப் பற்றி கேட்கும் தமிழகத் தலைவர்களிடம் தலையிடாதீர்கள் என்று சொல்வதற்கு முன், மூன்று தமிழர்களின் உயிர்கள் ஏன் பறிக்கப்பட்டன?
வேறு மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் கன்னடரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், கேள்வி கேட்பீர்களா? மாட்டீர்களா? என்றும் கேட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் தமிழ்நாட்டின் குரலை கட்டளையிட்டு அடக்க முடியாது என்றும் நீதிக்காக குரல் கொடுப்பது தங்கள் கடமை என்றும் தெரிவித்துள்ள வேல்முருகன், தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!