தமிழகத்தில் நான்காவது வாரிசு இளைஞரணி தலைவராக தேமுதிகவின் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிப்பணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசித்தார். பின்னர் தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். தேமுதிகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

விஜயகாந்த் உடல் நிலை குன்றியிருந்தபோதே விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், தேர்தல் அரசியலில் முதல் முறையாகக் களம் கண்டார். இந்நிலையில் தற்போது தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை வாரிசுகளுக்கு முடிசூட்ட இளைஞர் அணி பதவி ஒரு முன்னோட்ட பதவியாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நான்காவது வாரிசு இளைஞரணி தலைவராக விஜய பிரபாகரன் ஆகியுள்ளார்.

திமுகவில் 1980களில் இளைஞர் அணி உருவாக்கப்பட்டபோது அந்தப் பதவிக்கு இன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலின் அவருடைய தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதியால் நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் வரை ஸ்டாலின் நீடித்தார். ஸ்டாலினுக்கு பிறகு அந்தப் பதவி வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டாலும் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு இளைஞர் அணி பதவி அவருடைய வசமாகிவிட்டது.
இதையும் படிங்க: இதில் எனக்கு அடுத்து தான் ஸ்டாலினும்- விஜயும்... பொளந்து கட்டும் விஜய பிரபாகரன்!

இதே போல பாமகவில் எந்தக் கட்சி பொறுப்பையும் வகிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி அரசியலுக்குள் வந்த பிறகு அவருக்கு இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டது. அந்தப் பதவிக்குப் பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தேமுதிகவில் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியம் இல்லை. ஏனெனில் தமிழக அரசியலில் இளைஞர் அணி பதவி வாரிசுகளுக்கான பதவி ஆகிவிட்டது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க: விஜயகாந்திற்காக 2 கோரிக்கைகள்... தேமுதிக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?