விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை திருச்சுழி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்மானா பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆகாஷ் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் செந்தனேந்தல் பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் தொடர்பாக ஏற்பட்ட போட்டி காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஆகாஷுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!
இந்த முன்விரோதத்தின் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆகாஷ், முருகனின் கையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் வழக்கும் நடைபெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 6 மாதங்களாக ஆகாஷ் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 நாட்களுக்கு முன்புதான் அவர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், முருகனின் மகன் விஜய் (26), ஆகாஷை கொலை செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று மண்டலமாணிக்கம் கிராமத்தில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் திருச்சுழி வழியாக ஆகாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களுடன் ஆகாஷை பின்தொடர்ந்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த ஆகாஷ், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிலர் தன்னை ஆயுதங்களுடன் துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீண்டும் ஆகாஷை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், ஆகாஷ் சென்ற சாலையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆகாஷ் பலத்த காயங்களுடன் சாலையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆகாஷை ஆயுதங்களால் தாக்கி வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவரது மனைவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் விசாரணையில், தொழில் போட்டி காரணமாக ஆகாஷுக்கும் முருகனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த முன்விரோதம், பின்னர் முருகனின் மகன் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் கொலைச் சம்பவமாக மாறியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் விஜய் (26), அவரது நண்பர்களான ரித்தீஷ் (24), முரளி (27), காளிதாஸ் (21), சக்திவேல் (19), தினேஷ்குமார் (19) ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் திருச்சுழி காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழில் போட்டியில் தொடங்கிய முன்விரோதம், இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்படும் அளவுக்கு சென்ற சம்பவம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலை எங்கே?... பிரியாணி அண்டாவில் பெண் வேகவைக்கப்பட்ட கொடூரம்... இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்...!