சென்னை திரு.வி.க. நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பொற்கொடி மற்றும் அபிஷேக் ரங்கசாமி ஆகியோரை ஆதரித்துப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது திமுகவின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கல்வித் துறை சாதனைகளை ஒப்பிட்டு அவர் ஆற்றிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவின் போது மெரினாவில் இடம் ஒதுக்கியது குறித்து ஈ.பி.எஸ். விளக்கம் அளித்தார். கலைஞர் மறைந்த போது, அவர் முன்பு என்ன முடிவு எடுத்தாரோ (காமராஜர் விவகாரத்தில்), அதே முடிவைத்தான் நானும் எடுத்தேன். கிண்டியில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றனர். அப்போது நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை எனத் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய முயன்றதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக ஆட்சியின் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர் மெட்ரோ ரயில் திட்டம் 2-க்காக ₹63,000 கோடி நிதி பெறப்பட்டது. இதுவரை எந்த அரசுக்கும் ஒரு திட்டத்திற்காக இவ்வளவு பெரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கியதில்லை. மாணவர்களுக்கு ₹7,350 கோடி மதிப்பில் லேப்டாப் வழங்கப்பட்டது. மொத்தம் 52 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2030-ல் எட்ட வேண்டிய இலக்கை 2019-லேயே அதிமுக எட்டிவிட்டது. தற்போது 100-க்கு 52 பேர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!
மாநகராட்சி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடிய அவர் திமுக ஆட்சியின் கீழ் மாநகராட்சிகளில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்துப் பேசிய அவர் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தார்.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கை திமுக முற்றிலும் இழந்துவிட்டது. கடந்த முறை ஒரு தவறு செய்துவிட்டோம், மீண்டும் அதே தவறை செய்யக் கூடாது" என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!