தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசின் அணுகுமுறை மற்றும் அதிமுகவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்துத் திருமாவளவன் குறிப்பிட்டதாவது ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் விஜய் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது பாராட்டுக்குரியது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முதல்வர் என்னிடம் தெரிவித்தார். இது அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
இதையும் படிங்க: ஜோதிடத்தை நம்பினால் மதவாத அரசியலா..? முதல்வருக்கு திருமா. சப்போர்ட்..!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்துத் திருமாவளவன் விளக்கம் அளித்தார். அதிமுகவில் தற்போது நடைபெறும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவின் ஒரு தரப்பு நினைக்கலாம், அது அவர்களின் விருப்பம்.
அதிமுகவின் ஒரு பிரிவு கட்சி மாறி வாக்களிப்பார்களா என்பது தெரியாது. ஒருவேளை கட்சியின் கொறடா உத்தரவை மீறி யாராவது வாக்களித்தால், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், அந்த வாக்குகள் செல்லுமா என்பது குறித்தும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தான் இறுதி முடிவெடுப்பார்.
தவெக செய்தித் தொடர்பாளராக ஜோதிடர் நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர் ஜோதிடராக இருந்தாலும் கட்சியின் பொறுப்பிலும் இருக்கிறார். மதவாத அரசியல் என்பது வேறு, அவர் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராகவே அங்கு இருக்கிறார் எனப் பதிலளித்தார்.
நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருக்கும் என்றும், அதில் ஜனநாயக மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: BP எகிறுதே..! திக்.. திக்.. நிமிடங்கள்..! திருமா. பதிலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு..!