கோவை: அ.தி.மு.க. கூட்டணியின் கோட்டையாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் இந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கொடி பறக்குமா அல்லது த.வெ.க. ஓட்டுகள் பிரித்து அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாறுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2011 மற்றும் 2021 தேர்தல்களில் 10க்கு 10 அ.தி.மு.க. கூட்டணி வென்றது. 2016ல் மட்டும் சிங்காநல்லூரில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இதனால் கோவையை அ.தி.மு.க.வின் உறுதியான கோட்டை என்றே அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த முறை தி.மு.க. - அ.தி.மு.க. - நாம் தமிழர் - த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவியது. கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சூலூர், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நேருக்கு நேர் மோதின. கோவை வடக்கில் தி.மு.க. - பா.ஜ.க. இடையே போட்டி, சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையத்தில் அ.தி.மு.க. - காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி Vs வேலுமணி!! கோவையில் மாஸ் காட்டப்போவது யார்? 10 தொதிகள் யார் வசம்?!

தேர்தலில் தாராளமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறப்படுகிறது. ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பணம் வழங்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் ரூ.5,000 வரை கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பணம் கிடைக்காதவர்கள் கட்சியினரை நச்சரித்ததாகவும், சில நிர்வாகிகள் பணத்தை அமுக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் ஓட்டுப்பதிவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் வேட்பாளர்களிடம் நிலவுகிறது.
மற்றொரு பெரிய அச்சம் த.வெ.க. தலைவர் விஜய்யின் வருகை. ஒவ்வொரு குடும்பத்திலும் த.வெ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஓட்டுகளை பிரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என அ.தி.மு.க. கூட்டணியினர் கவலைப்படுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும் அதிருப்தி நிலவியது. சில தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து “சேஞ்ச் கரோ” கோஷம் எழுப்பப்பட்டது. கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூரில் காங்கிரஸ் நிர்வாகிகளே வேட்பாளருக்கு எதிராக உள்குத்து வேலை செய்ததாகவும், “எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டது” என்று கூறி த.வெ.க.வுக்கு ஓட்டு போடப் போவதாகவும் வெளிப்படையாகப் பேசினர்.
மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகும்போது, வாக்காளர்களின் உண்மையான விருப்பமா அல்லது கட்சிக்குள் நிலவும் உள்குத்துகளா என்பது தெரியவரும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிக்கப்போறது திமுக தான்!! கருத்து திணிப்பில் உ.பி-க்கள்! அதிமுக - தவெகவை சமாளிக்க புது திட்டம்!