சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பக்தவச்சலம் தெரு பகுதியை சேர்ந்தவர் மோகனா. வயது 54. இவர் கடந்த நான்கு வருடங்களாக மேற்கண்ட முகவரியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் (வயது 30). சதீஷ் (வயது 27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். மோகனாவின் கணவர் ரமேஷ் இறந்து விட்டார்.
மோகனாவின் மகன்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகாததால் தனக்குத் தெரிந்த புரோக்கர்களிடம் மோகனா மகன்களுக்கு பெண் பார்க்கும் படி கூறிவந்துள்ளார். இதன் மூலம் கடந்த மாதம் 25 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மோகனாவை ஒரு பெண்மணி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமண தரகர் வேலை செய்வதாகவும் தன்னிடம் நிறைய பெண்களின் புகைப்படம் மற்றும் ஜாதகம் உள்ளது எனக் கூறி உள்ளார்.

மோகனாவும் அவரை வீட்டிற்கு வர கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மோகனாவிடம் பேசிய சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண், மோகனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகனா மட்டும் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் பேச்சு கொடுத்துவிட்டு வரன் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உங்கள் வீட்டில் யாரோ செய்வினை வைத்து இருக்கிறார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்த வேப்பிலை மஞ்சள் அனைத்தையும் தண்ணீரில் கலந்து கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காதலை கைவிட்ட பெண்.. தனியாக பேச அழைத்து எரித்த மாமன் மகன்.. சினிமாவை மிஞ்சிய சைக்கோ காதலன்..!

மோகனா கலந்து கொண்டு வந்தவுடன் அதை வாங்கி அந்த பெண் மந்திரம் செய்வது பல மோகனாவுக்கு தெரியாமல் அதில் மயக்க மருந்து கலந்து அதனை மோகனாவிடம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கியவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலி மற்றும் மோகனாவின் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மோகனா மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது தங்கச் செயின் மற்றும் செல்போன் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மோகனா கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் ஓக்கியம்பாக்கம் ஸ்ரீ சாய் நகர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்கின்ற பத்மா (வயது 56) என்ற நபரை கைது செய்தனர். இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த பெண் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மேலும் இந்த பத்மாவதி தன்னை திருமண புரோக்கர் எனக்கூறி மோகனாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு மோகனா வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு சென்று நகைகளை திருடி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மோகனா வீட்டிலிருந்து திருடப்பட்ட ஒரு செல்போன் மற்றும் மூன்று சவரன் நகைகளை மீட்ட போலீசார் பத்மாவதி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவன் கடத்தல்.. ஓசியில் சூப் கேட்டு தாக்குதல்.. சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..!