உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலகையே கால்பந்து பித்தில் ஆழ்த்துகிறது. இந்த முறையும் போட்டிகள் தொடங்கியதும், உலகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். இந்தியாவிலும் இந்த பைத்தியம் பரவலாக உள்ளது.
மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வீரர்களின் படங்கள், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளின் தேசியக் கொடிகள், லோகோக்கள் ஆகியவை பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகளை வாங்கி அணிய ரசிகர்கள் துடிப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் திருப்பூர் பின்னலாடைத் தலைநகரம் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்கள் உலகக் கோப்பைக்கென தனி வடிவமைப்புடன் கூடிய டீ-சர்ட்டுகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டனர். தற்போது போட்டிகள் துவங்கியிருப்பதால், உள்ளூர் மற்றும் வெளி மாநில சந்தைகளில் இருந்து ஆர்டர்கள் பெருக்கெடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!
குறிப்பாக, இந்தியாவில் கால்பந்துக்கு மிக அதிக ரசிகர்களைக் கொண்ட கேரளா மாநிலத்தில் இருந்து வரும் ஆர்டர்கள் அதிக அளவில் உள்ளன.கேரளாவின் ஒவ்வொரு கிராமத்திலும் கால்பந்து ஜாம்பவான்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள், கொடிகள் மற்றும் ரசிகர் கூட்டங்கள் களை கட்டியுள்ளன. பாலக்காடு, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் திருப்பூரின் காதர்பேட்டை உள்ளிட்ட ஆடை சந்தைகளில் தங்கி, லட்சக்கணக்கான டீ-சர்ட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

ரசிகர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.500 வரை விலையில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் உயர்தர துணிகளில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.ஒரு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர் கூறியதாவது: “வழக்கமான காலத்தை விட உலகக் கோப்பை சீசனில் விளையாட்டு ஆடைகளுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும். இந்த ஆண்டும் அதே போக்கு தொடர்கிறது. கேரளா வியாபாரிகள் அதிக அளவில் வந்து பல ரகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர். இது நமது தொழிலுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது” என்றார்.
கேரளாவுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் (கொல்கத்தா), கோவா, வடகிழக்கு மாநிலங்கள் (அசாம், மேகாலயா) மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் (கன்னியாகுமரி, தூத்துக்குடி) ஆகிய பகுதிகளில் இருந்தும் கணிசமான ஆர்டர்கள் வருகின்றன.
சந்தையில் அர்ஜென்டினா (நீலம்-வெள்ளை) மற்றும் பிரேசில் (மஞ்சள்-பச்சை) டீ-சர்ட்டுகளுக்கே 70 சதவீதம் ஆர்டர்கள் குவிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். போர்ச்சுகல், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளின் ஆடைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு உலகக் கோப்பை கால்பந்து ஜுரம் ரசிகர்களை மட்டுமின்றி, திருப்பூர் பின்னலாடைத் தொழிலையும் சுறுசுறுப்பாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!