மதுரையைச் சேர்ந்த கலையரசி, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியாக இருந்தார். உடல் பருமன் குறித்த கவலையால், யூடியூப்பில் “இணைவோம் இயற்கையுடன்” போன்ற சேனல்களில் வரும் இயற்கை மருத்துவம் தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். அத்தகைய வீடியோக்களில் ஒன்றில், வெங்காரத்தை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாகக் குறையும் என்று தவறான தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய அவர், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி நாட்டு மருந்துக் கடையில் வெங்காரம் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றின. உடல்நிலை மோசமடைந்ததால், பெற்றோர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், விஷத்தன்மை காரணமாக அவரால் காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பலனின்றி, அவர் உயிரிழந்தார். வெங்காரம் என்பது சோடியம் போரேட் (என்ற வேதியியல் பெயரைக் கொண்ட ஒரு கனிம உப்பு ஆகும். இது சில பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன், சுத்திகரிக்கப்பட்ட வடிவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாதாரணமாகக் கிடைக்கும் வெங்காரம் உணவுக்கு ஏற்றது அல்ல என்றும் இது நச்சுத்தன்மை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்வழியாக அதிக அளவு உட்கொள்ளும்போது கடுமையான வயிற்று பிரச்சினைகள், உறுப்புச் செயலிழப்பு, ரத்தப்போக்கு, மரணம் கூட ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாஜ தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு! பிரதமர் மோடி, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் வாழ்த்து!!
இணையத்தில் சிலர் இதை எடை குறைப்பு, தோல் பராமரிப்பு போன்றவற்றுக்குத் தவறாகப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கலையரசியின் தந்தை கண்ணீர் மல்கியவாறு பேசியுள்ளார். யூடியூப் வீடியோக்களை நம்பி மருத்துவரைத் தவிர்த்து எதையும் சாப்பிட வேண்டாம். என் மகளைப் போல யாரும் இழக்கக் கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சமூக ஊடகங்களில் பரவும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை எவ்வளவு கவனமாக அணுக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் இத செய்யவே கூடாது..!! பக்தர்களுக்கு பறந்த எச்சரிக்கை..!!