பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில், 29வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் (BWF World Championships 2025) போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாபெரும் போட்டி, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே இடமான அடிடாஸ் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து பி.வி.சிந்து, லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் ஷி யுகி மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போதைய உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஆன் செ-யங் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.
இதையும் படிங்க: சீன வீராங்கனையை வீழ்த்தி கர்ஜித்த பி.வி சிந்து.. வைரலாகும் வீடியோ..!!
இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றில் (ரவுண்ட் ஆஃப் 64) அசத்தல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். புல்கேரியாவின் கலோயானா நல்பாண்டோவாவை எதிர்கொண்ட சிந்து, 23-21, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 39 நிமிடங்களில் போட்டியை முடித்தார்.
இந்நிலையில் உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் 2025 (BWF World Championships) கால் இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். ஆகஸ்ட் 29ம் தேதி நடந்த இந்தப் போட்டியில், இந்தோனேஷியாவின் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வார்டானியிடம் சிந்து 14-21, 21-13, 16-21 என்ற கணக்கில் மூன்று செட்களில் தோல்வியைத் தழுவினார். இந்தப் போட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
முன்னதாக, சிந்து இந்த தொடரில் அபாரமாக விளையாடி, உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங் ஜி யியை 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த வெற்றி, சிந்துவின் பழைய ஆதிக்கத்தை நினைவூட்டியது. இருப்பினும், புத்ரிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் செட்டை இழந்தாலும், இரண்டாவது செட்டில் சிந்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் மீண்டு வந்தார். ஆனால், முடிவு செட்டில் புத்ரியின் துல்லியமான தாக்குதல்களும், பாதுகாப்பு ஆட்டமும் சிந்துவை வீழ்த்தின.
இந்தத் தோல்வி, ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வெல்லும் சிந்துவின் கனவைத் தகர்த்தது. 2019-ல் உலக சாம்பியனான சிந்து, 2013, 2014-ல் வெண்கலம், 2017, 2018-ல் வெள்ளி, மற்றும் 2019-ல் தங்கம் வென்றார். இந்த ஆண்டு, சீரற்ற ஃபார்மில் இருந்தாலும், சிந்து தனது பயிற்சியாளர் இர்வான்ஸ்யாவின் வழிகாட்டுதலுடன் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து வந்தார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு தினத்தன்று நடந்த இந்த ஆட்டத்தில், சிந்துவின் முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், புத்ரியின் இளம் வயது ஆற்றலும், உத்திகளும் மேலோங்கின. இந்தத் தோல்வியால் இந்தியாவின் ஒற்றையர் பிரிவு பயணம் முடிவடைந்தது, ஆனால் இந்திய ரசிகர்கள் சிந்துவின் எதிர்கால ஆட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: சீன வீராங்கனையை வீழ்த்தி கர்ஜித்த பி.வி சிந்து.. வைரலாகும் வீடியோ..!!