மெக்சிகோவில் நடைபெற்ற ஹூண்டாய் வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். ஆண்கள் ரிகர்வ் பிரிவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
சால்டிலோ நகரில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், ஜப்பான் வீரர் நகானிஷி ஜுன்யாவை எதிர்கொண்டார் தீரஜ். தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஐந்து செட்களின் முடிவில் இருவரும் தலா 5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க சூட்-ஆப் நடத்தப்பட்டது. இதில் இந்திய வீரர் தீரஜ் தனது திறமையை நிரூபித்தார். அவர் துல்லியமாக 10 புள்ளிகளைப் பெற்ற நிலையில், நகானிஷி 9 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். இதன்மூலம் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.
இதையும் படிங்க: மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

25 வயதான தீரஜ், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த அவர், இந்த தொடரில் பல முன்னணி வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். காலிறுதியில் துருக்கியின் ஒலிம்பிக் பதக்க வீரர் மெட்டே பெர்கிம் துமரை 7-1 என்ற கணக்கில் தோற்கடித்தார். தொடர்ந்து அரையிறுதியில் பிரான்சின் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீரர் ஜீன்-சார்லஸ் வல்லடோன்ட்டையும் 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு எடின்பர்க் போட்டியில் இந்தியாவின் ஜெயந்தா தாலுக்தார் ஆண்கள் ரிகர்வ் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். அதன்பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும் தீரஜ் பெற்றுள்ளார்.
ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வில்வித்தை வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு டோலா பானர்ஜி மகளிர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தீரஜின் இந்த வெற்றி இந்திய வில்வித்தை உலகில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.