கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 253.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்த வெற்றி, 26 வயதான இளவேனிலின் இரண்டாவது ஆசிய தங்கப் பதக்கமாகும்; இதற்கு முன்பு 2019-ல் தைவானில் நடந்த போட்டியில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் அதிரடி மாற்றம்.. பிசிசிஐ எடுத்த முடிவு..!!
இறுதிப் போட்டியில் சீனாவின் சின்லூ பெங் (253 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் யூன்ஜி கோன் (231.2 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் மற்றொரு வீராங்கனை மெஹுலி கோஷ் 208.9 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். இளவேனில், உடல் நலக் குறைவையும் மீறி இந்த அபார வெற்றியைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது அவரது மன உறுதியையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த இளவேனில், தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம், உலகின் முதல் 10 வீராங்கனைகளில் இடம்பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதேபோல் ஜூனியர் மகளிர் ஸ்கீட் பிரிவில் மான்ஸி ரகுவன்ஷி தங்கமும், யஷஸ்வி ரத்தோர் வெள்ளியும் வென்றனர். ஆடவர் ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா 57 புள்ளிகளுடன் தங்கம் வென்று, முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியனை வீழ்த்தினார். 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் அணிப் பிரிவில் அர்ஜூன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் ஜாதவ் ஆகியோர் 1892.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.
ஜூனியர் ஆடவர் பிரிவில் அபிநவ் ஷா தனிநபர் தங்கம் பெற்றார். மேலும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ராஷ்மிகா சாகல் தங்கமும், மனு பாக்கர் வெண்கலமும் வென்றனர். ஆடவர் ஜூனியர் பிரிவில் கபில் தங்கமும், ஜோனாதன் அந்தோணி வெண்கலமும் பெற்றனர்.

இந்திய அணியின் சீனியர் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம், உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறனை உறுதிப்படுத்தியுள்ளது.
இளவேனிலின் இந்த சாதனை தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய விளையாட்டுத் துறைக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. அவரது இந்த வெற்றி இளம் வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகளிர் உலகக்கோப்பை பெங்களூருவில் நடக்காதாம்.. நவி மும்பைக்கு மாற்ற இதுதான் காரணம்..!!