ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகளின் (ஆசியன் யூத் கேம்ஸ் 2025) முதல் தங்கப் பதக்கத்தை இந்திய மகளிர் கபடி அணி தனது பெயரில் சேர்த்துக் கொண்டது. ஈரானை 75-21 என்ற மாபெரும் வித்தியாசத்தில் தோற்கடித்த இளம் வீராங்கனைகள், இந்தியாவின் கபடி மரபை புதுமையாக எழுப்பியுள்ளனர். இந்த வெற்றி, போட்டியின் நான்காவது நாள் (அக்டோபர் 23) இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெறப்பட்டது.

இந்திய அணி, குரூப் சுற்றில் அபாரமாக விளையாடி, ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஈரான், பஹ்ரைன், தாய்லாந்து போன்ற அணிகளை தோற்கடித்த இந்திய வீராங்கனைகள், தங்கள் வேகமான ரெய்டிங் மற்றும் சிறப்பான டாக்கிலிங் திறன்களால் எதிரணிகளை அதிர்ச்சியடையச் செய்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் பாரா தடகள நட்சத்திரம் சுமித் அன்டில்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தல்..!
இறுதியில் ஈரானை எதிர்கொண்ட போட்டியில், முதல் பகுதியிலேயே 34-13 என்ற கோலியாக முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது பகுதியிலும் அதே தீவிரத்துடன் விளையாடி, 75-21 என்ற ஸ்கோரால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, இந்தியாவின் இளம் கபடி திறன்களின் உச்சத்தைக் காட்டுகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதேபோல் ஆண்கள் இறுதியில், இந்தியா ஈரானை 35-32 என்ற நெருக்கடியான ஸ்கோரில் வென்றது. ஹால்ட் டைமில் 21-16 என்று முன்னிலை வகித்த இந்தியா, கடைசி நிமிடங்களில் ஈரானின் தாக்குதலை சமாளித்து, மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கத்தைப் பறித்தது. குழுப் சுற்றில் பங்களாதேஷ் (83-19), இலங்கை (89-16), பாகிஸ்தான் (81-26), ஈரான் (46-29), பஹ்ரைன் (84-40), தாய்லாந்த் (85-30) ஆகிய அணிகளை வீழ்த்தி, தோல்வியின்றி இறுதிக்கு வந்த இந்திய ஆண்கள் அணி, தங்கள் பொறுப்பான பாதுகாப்பு மற்றும் துல்லியமான ரெய்டுகளால் ரசிகர்களை மயக்கியது. இந்த இரட்டை வெற்றியால், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது: 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்.
கபடி வீரர்கள் தவிர, தாக்வோண்டோவில் தேபாசிஷ் தாஸ் மற்றும் யஷ்வினி சிங்-ஷிவான்ஷு படேல் ஜோடி வெண்கலம் வென்றனர். ஏத்லெடிக்க்ஸில் ரஞ்சனா யாதவ் வெள்ளி வென்றார். அம்புரே ஷௌர்யா வெள்ளியும், ஜாஸ்மின் கவுர் வெண்கலமும் வென்றனர். குராஷில் கனிஷ்கா பிதுரி வெள்ளி வென்றார். இந்த பதக்கங்கள் இந்தியாவை ஐந்தாவது இடத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
இந்தியாவின் 222 வீரர்கள் (119 பெண்கள், 103 ஆண்கள்) 21 விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்த போட்டி, 2013-க்கு பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெறுகிறது. அக்டோபர் 31 வரை நீடிக்கும் இந்த விளையாட்டில், இந்தியாவின் இளம் வீரர்கள் மேலும் பல பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

கபடி அணியின் தலைமை பயிற்சியாளர் சுனில், "இந்த வெற்றி, நம் இளம் பெண்களின் கடின உழைப்பின் பலன். இது இந்திய கபடியின் எதிர்காலத்தைப் பிரகாசப்படுத்தும்," என்று கூறினார். இந்திய மகளிர் கபடி அணியின் இந்த சாதனை, நாடு முழுவதும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீராங்கனைகளின் உழைப்பு, கபடி விளையாட்டை உலக அளவில் உயர்த்தும் என நம்புகிறோம். இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது!
இதையும் படிங்க: அடிலெய்ட் அற்புத சாதனையை தக்கவைக்குமா இந்தியா? நாளை நடக்கப்போவது என்ன..??