மல்யுத்த உலகின் ஐகானாக விளங்கிய ஹல்க் ஹோகன் நேற்றிரவு புளோரிடாவின் கிளியர்வாட்டரில் மாரடைப்பு காரணமாக தனது 71வது வயதில் காலமானார். 1980களில் "Hulkamania" மூலம் மல்யுத்தத்தை உலகளாவிய பிரபலமாக்கியவர் இவர். WWE மற்றும் WCW ஆகியவற்றில் தனது கவர்ச்சிகரமான ஆளுமை, மஞ்சள்-சிவப்பு உடைகள், மற்றும் "Real American" இசையுடன் ரசிகர்களை கவர்ந்தார்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அகஸ்தியாவில் 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி பிறந்த டெரி ஜீனி போலியா (Tere Gene Bollea) மல்யுத்த வீரராக வேண்டும் என்பதற்காக தனது உடலை கட்டுமஸ்த்தாக உருவாக்கினார். WrestleMania III இல் ஆண்ட்ரே தி ஜயண்ட்டை வீழ்த்தியது அவரது புகழின் உச்சம்.1977ல் தொடங்கிய அவரது வாழ்க்கை, WWF இல் 1983ல் புரட்சி செய்தது. ஆறு முறை WWF உலக சாம்பியனான இவர், 1996ல் WCW-இல் "Hollywood" Hulk Hogan ஆக வில்லனாக மாறி New World Order (nWo) குழுவை வழிநடத்தினார், இது மல்யுத்த வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
இதையும் படிங்க: 4வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!

மல்யுத்தத்தை தாண்டி, "Rocky III", "No Holds Barred" போன்ற திரைப்படங்களிலும், "Hogan Knows Best" தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சர்ச்சைகளும் அவரை விட்டு விலகவில்லை. 2015ல் இனவெறி கருத்துகள் காரணமாக WWE ஆல் நீக்கப்பட்டார், ஆனால் 2018ல் மீண்டும் இணைந்தார். Gawker இணையதளத்திற்கு எதிரான வழக்கில் $140 மில்லியன் வென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே 1982ம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டாலன் இயக்கி நடித்த ராக்கி 3 படத்தில் தண்டர் லிப்ஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் WWE வீரர்கள் நடிக்கலாம் என்கிற பாதையை போட்டுக் கொடுத்தார் ஹல்க் ஹோகன். ராக்கி 3 படத்தைத் தொடர்ந்து நோ ஹோல்ட்ஸ் பார்ட், சப் அர்பன் கமாண்டோ, மிஸ்டர் நானி, சாண்டா வித் மசல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராக், ஜான் சீனா, படிஸ்டா உள்ளிட்ட பலர் இப்போது ஹாலிவுட் படங்களில் அதிகளவில் நடித்து வர காரணமே இவர் போட்ட பாதை தான் என்கின்றனர். தன்னுடைய தண்டர் லிப்ஸ் இறந்துவிட்டானே என சில்வஸ்டர் ஸ்டாலன் உருக்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் 7.7 அடி ஆண்ட்ரே ஜெயண்ட்டை ஹல்க் ஹோகன் அடித்து நொறுக்கும் அசத்தலான போட்டோவை ஷேர் செய்து WWE சாம்பியனும் நடிகருமான ஜான் சீனா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரிக் ஃபிளேர், அண்டர்டேக்கர் உள்ளிட்ட பலரும் ஹல்க் ஹோகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஒரு சகாப்தத்தின் மறைவு என்றும் இமயம் சரிந்து விட்டது என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறுதி சுற்றில்... அசத்தும் இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்..!!