இந்திய செஸ் உலகம் மற்றொரு சாதனையைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஏ.ஆர். இளம்பரிதி, இந்தியாவின் 90வது செஸ் கிராண்ட்மாஸ்டராகவும், தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராகவும் தனது இடத்தைப் பெற்றுள்ளார். போஸ்னியா ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் விளையாட்டில் இவரது இறுதி கிராண்ட்மாஸ்டர் நார்ம் (GM Norm) பெறப்பட்டது. இந்தச் சாதனை, இந்திய செஸின் வளர்ச்சியை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபிக்கிறது.

2009ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இளம்பரிதி, சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆழமாக ஈடுபட்டு வந்தார். தனியார் பள்ளியில் படிக்கும் இவர், விஸ்வநாதன் ஆனந்தின் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். வியட்நாம் மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் முந்தைய நார்ம்களைப் பெற்ற இவர், தற்போது 2500 ஏலோ ரேட்டிங்கைத் தாண்டியுள்ளார். 2022இல், டச் ஜி.எம். அனிஷ் கிரியின் டெத் மேட்ச் பரிசுத் பணத்தை இளம்பரிதியின் பயிற்சிக்காக நன்கொடையாக அளித்தது, இவரது திறமையை உலக அளவில் அறிமுகப்படுத்தியது.
இதையும் படிங்க: நான் இப்போ நல்லா இருக்கேன்..!! உங்க எல்லாருக்கும் நன்றி..!! தனது உடல்நிலை பற்றி ஷ்ரேயாஸ் விளக்கம்..!!
இந்நிலையில், கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "சதுரங்கத்தில் தமிழ்நாட்டின் 35வது கிராண்ட்மாஸ்டராக இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் அவர் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார். தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும் போது இன்னும் பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு இந்திய சதுரங்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு வாழ்த்துகள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான இளம்பரிதி, தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

விஸ்வநாதன் ஆனந்த், “தமிழ்நாட்டின் இன்னொரு திறமையைப் பார்க்க மகிழ்ச்சி! ஆனந்த் முதல் குகேஷ் வரை, இந்தியாவின் செஸ் புரட்சி உண்மையானது. இளம்பரிதியை சர்வதேச அளவில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்!” என்று பாராட்டினார். தமிழ்நாடு, உலகின் சிறந்த செஸ் வீரர்களை உருவாக்கும் தலைநகரமாகத் திகழ்கிறது. டி. குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பலர் இங்கிருந்து வெளியேறி உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இளம்பரிதியின் இந்த வெற்றி, இளம் தலைமுறையை ஊக்குவிக்கும். இந்தியாவின் செஸ் புரட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இவரது எதிர்கால பயணம், உலக சாம்பியன்ஷிப் நோக்கி இருக்கலாம் என பலரும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 2026 உலகக் கோப்பை போட்டியில் விளையாட ஆசைப்படுறேன்..!! மெஸ்சி ஓபன் டாக்..!!