உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா இரண்டு பதக்கங்களை கைப்பற்றி கவனம் ஈர்த்துள்ளது. ஆடவர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது. இதன் மூலம் இரு பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் பெற்ற அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆடவர் பிரிவின் 11வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியா, ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. அர்ஜுன் எரிகைசி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்த நிலையில், உலக சாம்பியன் டி.குகேஷ் ஹங்கேரியின் க்ளெப் டுடினிடம் தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதனால் இந்தியா 18 போட்டிப் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
முதல் இடத்தை 20 புள்ளிகளுடன் போட்டியை நடத்திய உஸ்பெகிஸ்தான் கைப்பற்றியது. இந்தியாவும் ஜெர்மனியும் தலா 18 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், டைபிரேக் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது. ஜெர்மனி வெண்கலத்தை வென்றது.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் தமிழக வீரர்களின் அதிரடி சாதனை! முதல்வர் விஜய் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
மகளிர் பிரிவிலும் இந்திய அணிக்கு பதக்கம் கிடைத்தது. கடைசி சுற்றில் ஜார்ஜியாவுக்கு எதிரான போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. கோனேரு ஹம்பி வெற்றி பெற்றார். வந்திகா அகர்வால் தனது ஆட்டத்தை டிரா செய்தார். சவிதா ஸ்ரீவும் கடினமான நிலையில் இருந்து டிராவை மீட்டெடுத்து அணிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். திவ்யா தேஷ்முக் தனது ஆட்டத்தில் தோல்வியடைந்தார். இறுதியில் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலத்தை வென்றது.

இந்தியாவின் இரு அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு கிடைத்த மற்றொரு முக்கிய அங்கீகாரம், சிறந்த ஒட்டுமொத்த அணிக்கான நொனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை. இதை இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக தக்கவைத்துள்ளது.
இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய செஸ் வீரர்களின் ஆர்வமும் மனவுறுதியும் முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த வெற்றிகள் மேலும் பல இளைஞர்களை செஸ் விளையாடவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், சமர்கண்ட் ஒலிம்பியாட்டின் இரட்டை பதக்க வெற்றி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!