சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக தேதிகளை அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவிருக்கும் இந்த மாபெரும் தொடர், பிப்ரவரி 7, 2026 முதல் மார்ச் 8, 2026 வரை நடைபெற உள்ளது.

இந்த 10வது டி20 உலககோப்பையில் 20 அணிகள் பங்கேற்கின்றன, மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் ஐந்து மைதானங்களிலும், இலங்கையில் இரண்டு மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அல்லது இலங்கையின் கொழும்பில் நடைபெறும், இது பாகிஸ்தானின் அணியின் நிலைப்பாட்டைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: 17வது ஆசிய கோப்பை தொடர் இன்று தொடக்கம்.. கிரிக்கெட் ரசிகர்கள் ஹேப்பியோ ஹாப்பி..!!
2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பையைப் போலவே, இந்த தொடரும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இறுதியாக, அரையிறுதி வெற்றியாளர்கள் இறுதிப்போட்டியில் மோதுவர். இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய 15 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஐந்து இடங்களுக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 2வது வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பே ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிக்கப்படும். இதேபோல் மகளிர் பிரிமியர் லீக் தொடர் எப்போதும் பிப்ரவரி மாதம் தான் தொடங்கப்படும். தற்போது டி20 உலக கோப்பை நடைபெறுவதால் அதனை ஜனவரி மாதத்தில் நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்பதால் மைதானத்தை புனரமைக்கும் பணியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா, 2024 டி20 உலககோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டம் வென்றது, இந்த முறை சொந்த மண்ணில் தனது பட்டத்தை தக்கவைக்க முயலும். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டம் மீண்டும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான முழுமையான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. ஷாக் கொடுத்த இந்திய வீரர் அமித் மிஸ்ரா..!!