உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (BCCI) மீதான வெளிப்படைத்தன்மை குறித்த விவாதங்கள் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், மத்திய தகவல் ஆணையம் (CIC) முக்கிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. பிசிசிஐ ஒரு அரசு அமைப்பு அல்ல எனவும், எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 2005-ன் கீழ் அது வராது எனவும் CIC தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் வழங்கிய இந்த உத்தரவில், பிசிசிஐ அரசியலமைப்புச் சட்டத்தாலோ அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்பதால் அதை ‘பொது அதிகார அமைப்பு’ (Public Authority) எனக் கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐயிடம் இருந்து RTI மூலம் தகவல்களைப் பெற முடியாது.

இந்த விவகாரத்தின் பின்னணி 2018-ல் தொடங்குகிறது. அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு, பிசிசிஐயை பொது நிறுவனம் என அறிவித்து, RTI அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து பிசிசிஐ உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தது.
இதையும் படிங்க: பீகார் படைத்த புதிய கிரிக்கெட் அதிசயம்.. இந்திய டெஸ்ட் அணியில் இணைகிறாரா 15 வயது ஆட்ட நாயகன்..??
அதன்படி CIC இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது.பிசிசிஐ இந்திய கிரிக்கெட்டின் உச்ச அமைப்பாக இருந்து, ஐபிஎல் உள்ளிட்ட உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் தொடர்களை நடத்தி வருகிறது. வருடாந்திர வருமானம் ஆயிரக்கணக்கான கோடிகளைத் தொடும் இந்த அமைப்பின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தங்கள் ஆகியவை குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

2019 முதல் 2024 வரை பிசிசிஐ தலைவராக இருந்த ஜெய் ஷா (மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன்) தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த CIC உத்தரவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆர்வலர்களிடையே பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது.
பிசிசிஐயின் மகத்தான பொருளாதார வலிமை கருதி, அதன் செயல்பாடுகளுக்கு சில கண்காணிப்பு வழிமுறைகள் தேவை என்பது ஒரு தரப்பு வாதம். மறுபுறம், தனியார் அமைப்பான பிசிசிஐ அரசு தலையீடு இன்றி செயல்பட வேண்டும் என்பது மற்றொரு கருத்து. இந்த முடிவு தொடர்பாக சட்டப் போராட்டங்கள் மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பஞ்சாப்பை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஆர்சிபி!