ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 18 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடைபெற்ற வெற்றி விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஆனால், இந்த மகிழ்ச்சியான நிகழ்வு கூட்ட நெரிசலால் பெரும் சோகத்தில் முடிந்தது.

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்கள் காரணமாக கடுமையான நெரிசல் ஏற்பட்டது. மைதானத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டிருந்ததால், உள்ளே நுழைய முயன்றவர்கள் தள்ளுமுள்ளு ஏற்படுத்தினர். இதில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மௌனத்தை உடைத்த ஆர்சிபி.. 3 மாதங்களுக்கு பிறகு போட்ட உருக்கமான பதிவு..!!
இந்த துயர சம்பவத்திற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் காரணமாக கருதப்படுகிறது. காவல்துறை அனுமதி மறுத்த போதும், வெளிநாட்டு வீரர்களின் இருப்பை கருத்தில் கொண்டு விழாவை தள்ளிவைக்காமல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ஆர்சிபி நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
முதலமைச்சர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அறிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் இந்த துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டது. RCB CARES என்ற பெயரில் வெளியான அந்த பதிவில், கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைத்தளத்தில் நிலவிய மௌனம், அணியின் இயல்பற்ற தன்மையோ அல்லது இடைவெளியோ இல்லை, மாறாக அது துக்கத்தின் வெளிப்பாடு என விளக்கமளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அஸ்வின்..!!