மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக "ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் முறைப்படுத்துதல் மசோதா, 2025" (The Promotion and Regulation of Online Gaming Bill, 2025) எனும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 20ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்திய பின்னர் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, இது சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த மசோதா, பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதோடு, பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது, பிரபலங்களால் புரோமோட் செய்யப்படுவது உள்ளிட்டவற்றையும் இது தடை செய்கிறது. இளைஞர்களைப் பாதுகாக்கவும், பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியளிப்பு போன்றவற்றைத் தடுக்கவும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..! எப்போ தெரியுமா..?
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் துயரமான விளைவுகளைக் குறிப்பிட்டு, இந்த மசோதா மத்தியதர குடும்பங்களின் நலனுக்காகவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதா இ-விளையாட்டு (e-sports) துறையை ஊக்குவிக்கும் அதே வேளையில், சமூகத்தைப் பாதுகாக்கும் என்று வரவேற்றுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக மசோதாக்களை இயற்றியிருந்தாலும், மத்திய அரசின் இந்த தேசிய அளவிலான சட்டம், ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையை உருவாக்குவதற்கு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இதனால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பேன்டஸி விளையாட்டு தளமான ட்ரீம் 11, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா 2025 காரணமாக பணம் செலுத்தி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நிறுத்தியுள்ளது. இந்த மசோதா, திறன் அல்லது வாய்ப்பு அடிப்படையிலான அனைத்து பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்கிறது. இதனால், ட்ரீம் 11, மை11சர்க்கிள், எம்பிஎல் உள்ளிட்ட பல பிரபல தளங்கள் தங்கள் பணம் சார்ந்த சேவைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
2008ஆம் ஆண்டு ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் ஷெத் ஆகியோரால் தொடங்கப்பட்ட ட்ரீம் 11, 28 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய பேன்டஸி விளையாட்டு தளமாக விளங்கியது. 2024ஆம் நிதியாண்டில், ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் மூலம் இந்நிறுவனம் ₹9,600 கோடி வருவாய் ஈட்டியது.
இருப்பினும், புதிய மசோதா இதன் முக்கிய வருவாய் மூலமான பணம் சார்ந்த போட்டிகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், ட்ரீம் 11 இன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு, ட்ரீம் செட்கோ, ட்ரீம் கேம் ஸ்டுடியோஸ் போன்ற பிற துறைகளுக்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் இலவசமாக ஆடும் போட்டிகள் மட்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா, ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல், மோசடி மற்றும் நிதி இழப்புகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இத்துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளும், ₹25,000 கோடி முதலீடுகளும் ஆபத்தில் உள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பயனர்களின் கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதனை திரும்பப் பெறலாம் எனவும் ட்ரீம் 11 உறுதியளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11, இனி இலவச விளையாட்டு முறைக்கு மாறி, புதிய வடிவங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு..! எப்போ தெரியுமா..?