பஞ்சாப் மாநிலத்தின் அட்டாக் நகரைச் சேர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய அணிக்காக அறிமுகமானார். அவரது அதிரடி பேட்டிங் மற்றும் ஆஃப்-சைட் ஆட்டத்திற்காக இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிடப்பட்டார். 2019இல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், 2016இல் அண்டர்-16 மற்றும் 2017இல் அண்டர்-19 அணிகளில் விளையாடினார். சமீபத்தில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மூன்று இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் குவித்து, சராசரி 70.5 உடன் சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணையில் உள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியுடன் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்த ஹைதர் அலி, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று மான்செஸ்டர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் தகவலின்படி, ஒரு பெண்ணின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ICC ஜூலை மாத சிறந்த வீரர் விருது.. பரிந்துரை பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், ஹைதர் அலியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாகவும், விசாரணை முடிவடையும் வரை இடைநீக்கம் நீடிக்கும் அறிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹைதர் அலி, பிசிபி-யின் சட்ட உதவியுடன் இந்த வழக்கை எதிர்கொள்கிறார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் அவரது தொழில் வாழ்க்கையையும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நற்பெயரையும் பாதிக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. விசாரணையின் முடிவு இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இம்பேக்ட் பிளேயர்' விருது வென்ற வாஷிங்டன் சுந்தர்.. பாராட்டிய ஜடேஜா..!!