இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட 2025 ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். ஆர் சி பி அணி எஞ்சிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். மறுபுறம் கொல்கத்தா அணியை பொறுத்தவரை 11 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் எஞ்சி இருக்கிறது.

இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட கொல்கத்தா அணி 15 புள்ளிகள் மட்டுமே பெறும். இதனால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்லும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று ஓட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கனமழை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இரவு 9 மணி வரை இந்த கனமழையானது நீடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நாளை தொடர்கிறது 2025 ஐபிஎல்... RCB vs KKR போட்டிக்கு தடையாக வானிலை; யாருக்கு சிக்கல்?

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் மைதானம் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறந்த மழைநீர் வடிகால் இருக்கும் மைதானம் இது என்பதால் மழை நின்றால் உடனடியாக தண்ணீர் வடிந்துவிடும் ஆடுகளத்தை எப்படியும் தயார் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ இருந்து வருகிறது. ஆனால் மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனிடையே இன்றைய போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

இதனால் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளை பெற முடியும் என்பதால் அவர்கள் தொடரை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆர் சி பி அணி 17 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறி விடுவார்கள். எனினும் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகாது. எஞ்சிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற வேண்டிய நிலை ஆர் சி பி அணிக்கு ஏற்படும். இதனிடையே, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக ரசிகர்கள் வெள்ளை நிற ஜெர்சியுடன் வந்து வழி அனுப்ப சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மழை நிற்காமல் பெய்து வருவதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!