இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. எனவே, நடப்பு ரஞ்சி கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுகிறார்கள். குறிப்பாக ஃபார்மின்றி தவிக்கும் ரோஹித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இதற்காக அவர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஞ்சிக் கோப்பையில் ரோஹித் விளையாடுவது பற்றி மும்பை அணியின் கேப்டன் ரஹானே பேசியுள்ளார்.
“பல ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணிக்காக ரோஹித் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்கள் அனைவரும் அவரிடமிருந்து ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. நானும் அவரும் பல ஆண்டுகளாக உள்ளூர், இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி உள்ளோம். போட்டியின்போது அவர் சொல்லும் கருத்துகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் அவருக்குச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய ஆட்டத்தைப் பற்றி அவர் நன்கு அறிவார். ரஞ்சியில் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அதேபோல அணிக்கு ஜெய்ஸ்வால் திரும்பி உள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என ரஹானே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நோ… நோ… உலக சூப்பர் ஸ்டார்களான நாங்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலா…?' பிசிசிஐ-க்கு எதிராக கெத்துக்காட்டும் கோலி-கே.எல்.ராகுல்..!