2026-ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் இன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடத்தும் இந்த மெகா தொடர், இன்று தொடங்கி பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக 5 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், 22 ஆட்டங்கள் நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இன்று மாலை 6:45 மணிக்குத் தொடங்கும் பிரம்மாண்டத் தொடக்க விழாவில், பாலிவுட் நட்சத்திரம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிரபல ராப் பாடகர் யோ யோ ஹனி சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளன.

தொடக்க விழாவைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கோப்பையைக் கைப்பற்றிய மும்பை அணி, இந்த ஆண்டும் வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேவேளையில், 2024-ஆம் ஆண்டு சாம்பியனான பெங்களூரு அணி, நட்சத்திர வீராங்கனைகள் எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோருடன் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: T20 உலகக் கோப்பை: கோரிக்கை வைத்த வங்காளதேச அணி.. ஷாக் கொடுத்த ஐசிசி..!!
இந்தத் தொடரின் முதல் 11 போட்டிகள் நவி மும்பையிலும், அதன் பிறகு வதோதராவில் எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி உட்பட எஞ்சிய 11 போட்டிகளும் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதோடு, ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளன. இன்று நள்ளிரவு வரை டி.ஒய். பாட்டீல் மைதானம் ரசிகர்களின் கரகோஷத்தால் அதிரும் என்பதால் கிரிக்கெட் உலகமே நவி மும்பையை நோக்கித் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: சிறந்த வீராங்கனைகள்.. வெளியானது தரவரிசை பட்டியல்..!! ஸ்மிருதி மந்தனா எந்த இடம் தெரியுமா..??