உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1.3 லட்சம் கோடி (15 பில்லியன் டாலர்) முதலீட்டில் பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க உள்ளது. இது இந்தியாவின் முதல் 'ஏஐ சிட்டி' திட்டத்தின் அடிப்படையாக அமையும். விசாகப்பட்டினத்தில் 1 கிகாவாட் திறனுடைய இந்த ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம், கூகுளின் அமெரிக்காவுக்கு வெளியேயான பெரிய முதலீட்டாக இருக்கும்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வ விழாவில், ஆந்திரா அரசு மற்றும் கூகுள் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். கூகுள் கிளவுட் தலைவர் தாமஸ் குரியன், இந்த மையம் இந்தியாவின் ஏஐ மாற்றத்தை விரிவுப்படுத்தும் என்று வலியுறுத்தினார்.
இந்தத் திட்டம், விசாகப்பட்டினத்தை இந்தியாவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றும். 1 கிகாவாட் திறனுடைய தரவு மையம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டு, கூகுளின் உலகளாவிய நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். அரசு மதிப்பீடுகளின்படி, 2028-2032க்கு இடைப்பட்ட காலத்தில் இது ஆண்டுதோறும் ரூ.10,518 கோடி ஜிஎஸ்டிபி சேர்க்கும். மேலும், 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை (நேரடி மற்றும் மறைமுக) உருவாக்கும். ஆந்திராவில் ஏற்கனவே அதானி குழுமம் ரூ.18,900 கோடியும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 5,001 கோடியும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு மேலும் ஒரு ஜாக்பாட்டாக கூகுள் நிறுவனத்தின் முடிவு அமைந்துள்ளது.
கூகுள் கிளவுட் சேவைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.9,553 கோடி உற்பத்தித்திறன் அதிகரிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.47,720 கோடி பங்களிப்பு இருக்கும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "இது ஆந்திராவின் டிஜிட்டல் புரட்சியின் தொடக்கம்தான். விசாகப்பட்டினம் 'ஏஐ சிட்டி' ஆக மாறும்" என்று கூறினார். அமைச்சர் நாரா லோகேஷ், "இந்த முதலீடு ஒரு வருடத்திற்கும் மேலான விவாதங்களுக்குப் பின் உருவானது. இது 6 கிகாவாட் தரவு மையங்கள் கட்ட அரசின் இலக்கை உத்வுரவிடும்" என்றார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏஐ இந்தியாவின் தொழில்முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டம், இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்தியா ஏஐ திட்டங்களுடன் ஒத்துப்போகிறது. 2047க்குள் 2.1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர அரசு, ஒற்றை சன்னல் அனுமதிகள், நம்பகமான மின்சாரம், தண்ணீர் வசதிகள் ஆகியவற்றை வழங்கி, திட்டத்தை எளிதாக்கியுள்ளது. இது ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் மைல்கல் நிகழ்வாக அமையும்.