மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, உலகளாவிய அளவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். 2009ஆம் ஆண்டு அறிமுகமான இந்தச் செயலி, 2014இல் மெட்டா (முன்னாள் பேஸ்புக்) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பின்னர், பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வளர்ச்சி கண்டுள்ளது.
முதலில் வெறும் உரைச் செய்திகளை அனுப்பும் வசதியுடன் தொடங்கிய வாட்ஸ்அப், பின்னர் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்தல், ஆடியோ-வீடியோ அழைப்புகள் என பல்வேறு வசதிகளை தொடர்ந்து சேர்த்து வந்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடும்பம் என அனைத்து தரப்பினரும் இதை தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காலையில் எழுந்தவுடன் பலரும் முதலில் திறக்கும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பது இன்றைய யதார்த்தம். ஸ்மார்ட்போன்களில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், கணினியில் (குறிப்பாக விண்டோஸ், மேக்) வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு வாட்ஸ்அப் வெப் (web.whatsapp.com) அல்லது தனி டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்த வேண்டியிருந்தது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் விளம்பரமில்லா சேவைக்கு விரைவில் கட்டணம்..?? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா..!!
ஆனால், வாட்ஸ்அப் வெப் மூலம் உரை அரட்டை, ஊடகப் பகிர்வு மட்டுமே சாத்தியமாக இருந்தது; ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி இல்லாதது பயனர்களுக்கு பெரும் குறையாக இருந்து வந்தது. இதனால் பலர் தனி டெஸ்க்டாப் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது இந்த நீண்டகால எதிர்பார்ப்புக்கு முடிவு கட்டும் வகையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் வெப் இல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம், தற்போது பீட்டா (சோதனை) பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படத் தொடங்கியுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், தனியாக எந்த டெஸ்க்டாப் செயலியையும் டவுன்லோடு செய்யாமல், நேரடியாக உலாவியில் (பிரவுசர்) வாட்ஸ்அப் வெப் திறந்து, தனிப்பட்ட உரையாடல்களில் (ஒருவருக்கு ஒருவர்) ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு செய்யலாம்.
உரையாடல் திரையின் மேல் பகுதியில் உள்ள வீடியோ கால் ஐகானை கிளிக் செய்தால், ஆடியோ கால் அல்லது வீடியோ கால் என்ற இரு விருப்பங்கள் தோன்றும். டெஸ்க்டாப் செயலியில் உள்ள அதே போன்ற அனுபவத்தை இதுவும் வழங்கும். மேலும், வீடியோ அழைப்பின் போது ஸ்கிரீன் ஷேர் (திரைப் பகிர்வு) செய்யும் வசதியும் உள்ளது. இந்த அம்சம் முழுமையாக எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (முழு பாதுகாப்பு) கொண்டதாக இருப்பதால், அழைப்புகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
குழு அழைப்புகளுக்கான வசதி (32 பேர் வரை) இன்னும் சோதனை நிலையில் உள்ளது; அது விரைவில் வரும் எனத் தெரிகிறது. இந்த புதுப்பிப்பு, குறிப்பாக லினக்ஸ் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், லினக்ஸுக்கு தனி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி இல்லாத நிலையில், வெப் வழியாகவே அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

மேலும், வேலை அல்லது கல்வி தொடர்பான அழைப்புகளை கணினியில் இருந்தபடியே எளிதாக மேற்கொள்ள இது உதவும்.வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர் வசதிக்கு ஏற்ப புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவதால், இன்றைய டிஜிட்டல் உலகில் இது மேலும் இன்றியமையாத செயலியாகத் திகழ்கிறது. வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும்போது, வாட்ஸ்அப் வெப் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: இந்திய சந்தையில் சக்கைபோடு போடும் புது ஸ்மார்ட்போன்..!! என்னென்ன அம்சங்கள் தெரியுமா..??