சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தை தொடர்ந்து, தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்சன் தயாரிக்க, ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: ஃபோன் விலையே ரூ.10 லட்சமா..! 'அம்பானி' கூடவாங்க முடியாதாம்..நடிகர் பகத் பாசில் உபயோகிக்கும் செல்போனை..!
கடந்த 13ம் தேதி சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் மேலே பறந்து தரையிறங்க வேண்டும் என்பதுதான் காட்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார் தரையில் உருண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது காருக்குள் இருந்த மோகன்ராஜ் பலத்த காயத்தோடு சுயநினைவை இழந்தார். மேலும் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சிகள் தேவைதானா? எதற்காக ஒரு உயிருடன் விளையாட வேண்டும் என பா ரஞ்சித்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், திரையுலகில் பணிபுரியும் 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தனிப்பட்ட மருத்துவ காப்பீடு வழங்கியுள்ளார். இந்த இன்சூரென்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அக்ஷய் குமாரை ஆழமாகப் பாதித்ததால், ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் வகையில் இந்த முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார்.
அக்ஷய் குமார், தனது சொந்த செலவில் இந்த காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது திரையுலகில் பின்புலத்தில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இந்த முயற்சி, திரையுலகில் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்த செயல், தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று கருதப்படுகிறது. பல நடிகர்கள் நன்கொடைகள் வழங்கினாலும், அக்ஷய் குமாரின் இந்த நடவடிக்கை, தொழில்முறை அளவில் நீடித்த தீர்வை வழங்குவதாக அமைந்துள்ளது. இவரது முயற்சி, திரையுலகில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.
அக்ஷய் குமாரின் இந்த மனிதநேய செயல், சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது, மேலும் இது பிற நடிகர்களையும் இதுபோன்ற சமூகப் பங்களிப்புகளில் ஈடுபட ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் காமெடி பண்ணுறாரு.. நான் பணத்தை வாங்கினேனா.. நடிகர் நிவின் பாலி பதிலடி..!