தமிழ் சினிமாவின் திறமையுள்ள நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தற்போது அவர் தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் அவர், அதன் அறிமுக விழாவை சென்னையில் விமரிசையாக நடத்தினார். இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவுக்கு மிகுந்த கௌரவத்தையும் வரவேற்பையும் அளித்தனர்.
சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும் பல திரையுலக முன்னணி பிரபலங்கள் விழாவில் பங்கேற்று, ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ரவி மோகன் மூன்று புதிய திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருப்பதாக விழாவில் அறிவித்தார். இது அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு சக்திவாய்ந்த தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதன்படி முதல் படமாக, இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகராக ரவி மோகன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இது ஒரு த்ரில்லர் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து இரண்டாவது படத்தில், கதாநாயகன் யோகி பாபு, இவரை மையமாக வைத்து உருவாகும் காமெடி கலந்த குடும்பக் கதை..இதையும் ரவி மோகன் தயாரிப்பதோடு, இயக்கும் பணியையும் ஏற்கிறார். மூன்றாவது படம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நட்சத்திரங்கள் இணையும் படம் எனவும் கூறப்படுகிறது. இதனை குறித்து ரவி மோகன் கூறுகையில், "நான் திரையில் நடித்துப் பெற்ற அனுபவங்களை வைத்து, இப்போது சினிமாவுக்கு ஒரு தரமான திரைக்கதை, தரமான படங்கள் கொடுக்க விரும்புகிறேன்.

எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக, புதுமுகங்களை ஊக்குவிக்கவும், நல்ல கதைகள் கொண்ட படங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன்" என்றார். அவர் கூறியபடி, "மாணவர்கள், புது இயக்குநர்கள், கதை எழுத்தாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கதைகளை அனுப்பலாம்" என்றும் அறிவித்துள்ளார். இது, தன்னை சுற்றி உள்ள புதிய திறமைகளை மேடையில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்தாலும், ரவி மோகனின் நடிப்புப் பயணம் தொடரும் என்பதை இந்த விழாவிலேயே உறுதியாக அறிவித்தார். தற்போது அவர் 'கராத்தே பாபு' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் இப்படத்தின் பெயரே சொல்வது போல, இது ஒரு ஆக்ஷன் கலந்த தந்தை-மகன் உறவு மையப்படுத்திய படமாக உருவாகிறது. இந்த படம் 2026 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் ரவி மோகன் நடிக்கிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக மாறுகிறார் என்பதும், இது அவருடைய நடிப்பு பரந்த அளவில் பேசப்படும் வகையில் அமையக்கூடும் என்பதையும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக விழாவில் நடந்த முக்கியமான தருணங்கள் என பார்த்தால் சிவகார்த்திகேயன், தனது நெருங்கிய தோழராக ரவி மோகனை புகழ்ந்தார் அதன்படி "சினிமாவை பாசத்தோடு நேசிக்கும் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் என்பதே, தமிழ்ச் சினிமாவுக்கே நல்லதொரு செய்தி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: துப்பாக்கி யார்கிட்ட இருந்தாலும் வில்லன் நான் தான்..! ட்ரெய்லரை தொடர்ந்து சென்சாரிலும் மாஸ் காட்டும் 'மதராஸி'..!

அடுத்து ஜெனிலியா, "முன்னேற்றத்தை நோக்கி நடக்கும் பயணத்தில், மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார். இவர்களை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த சிவராஜ்குமார், “தமிழ் – கன்னட திரையுலகங்களை இணைக்கும் புதிய முயற்சி இது” என தெரிவித்தார். விழாவில் பெரிய LED ஸ்கிரீன், இயக்குனர்கள்-நடிகர்கள் பேனல் டிஸ்கஷன்கள், மற்றும் விரிவான ப்ரொடக்ஷன் திட்டங்கள் பற்றிய விவரங்களும் பகிரப்பட்டன. மேலும், மூன்று படங்களுக்குமான புதிய தலைப்புகள், பூஜை காட்சிகள் மற்றும் போஸ்டர்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரவி மோகன் ஒரு நடிகராக தனது தனித்தன்மையை நிறுவியவர். இப்போது தயாரிப்பாளராக, சினிமா உலகத்திற்கு தரமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். அவரின் முயற்சி, தமிழ் சினிமாவிற்கு புதிய கோணத்தில் உயர்தரமான காமெஷியல் மற்றும் கலைப் படங்களை அளிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் தன் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஒரே நேரத்தில் மூன்று படங்களை அறிவித்திருப்பது, ஒரு சினிமா ஆர்வலராக அவர் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதையும், தன்னம்பிக்கையோடும் திட்டமிடலோடும் செயல் படுத்தும் ஒரு தயாரிப்பாளராகவும் உருவெடுக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

இனி வரவிருக்கும் ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’, மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படங்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. தமிழ் சினிமாவிற்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்க போகிறது.
இதையும் படிங்க: பார்த்ததில் பிடித்த தமிழ் படம் இதுதானாம்..! 'சச்சின் டெண்டுல்கர்' பேச்சால் ஓடிடியில் தேடி பார்க்கும் ரசிகர்கள்..!