தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிலவும் தாமதத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வரும் மே 31-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மலைப்பிரதேசங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம், தமிழகம் முழுவதும் ஏன் இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதற்கான காலக்கெடுவை மே 31 என நிர்ணயித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராவிட்டால், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் தலா ₹10 அபராதம் விதிக்க நேரிடும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் போராட்டம்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! கொந்தளிப்பில் டாஸ்மாக் ஊழியர்கள்..!!
காலி மதுபாட்டில்கள் விளைநிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே இத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஏற்கனவே நீலகிரி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்பட்டு, பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை நுகர்வோரிடம் வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை தற்போது மே 31 முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!