தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில், நடிப்பின் சிங்கமாக ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள “அகண்டா 2” திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
2021-ல் வெளியான அகண்டா திரைப்படம், பாலய்யாவின் கரியரில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்த நிலையில், அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்பை அகண்டா 2 எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறது? இது பாலய்யா ரசிகர்களுக்கு மட்டும் ஆன படமா அல்லது பொதுவான ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறதா? என்பதை விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
அகண்டா முதல் பாகத்தின் இறுதியில், அகண்டா தனது தம்பி முரளி கிருஷ்ணாவிடம், “என் மகளுக்கு எப்போதாவது எந்த கஷ்டம் வந்தாலும், அந்த நிமிடமே நான் அங்கே இருப்பேன்” என்று ஒரு சத்தியத்தை செய்து விடுகிறார். அந்த சத்தியமே அகண்டா 2-ன் மையமாக மாறுகிறது. வருடங்கள் கடந்து செல்ல, முரளி கிருஷ்ணாவின் மகள் ஜனனி, ஒரு திறமையான விஞ்ஞானியாக வளர்ந்து, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கிசுகிசுக்காக அல்ல.. உண்மையான முடிவு..! ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து.. கணவர் அபிஷேக் பச்சன் திட்டவட்டம்..!

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஒரு எதிர் நாட்டின் ஜெனரல், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற தீய நோக்குடன், பல கொடூர திட்டங்களை தீட்டுகிறார். இந்த ஜெனரலின் முக்கிய இலக்கு என்னவென்றால், “இந்திய மக்கள் கடவுளை நம்புவதை முற்றிலும் கைவிட வேண்டும்” என்பதே. இந்திய மக்களின் பலமாக இருக்கும் ஆன்மிக நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்பதற்காக, அவர் இந்தியாவில் உள்ள சில அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து, ஒரு மிகப் பெரிய சதியை திட்டமிடுகிறார். அதாவது மகா கும்பமேளா போன்ற மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சியில், கோடிக்கணக்கான மக்கள் கூடும் நேரத்தில், ஒரு கொடிய வைரஸை பரப்பி, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கச் செய்கிறார்கள். கங்கையில் புனித நீராட வந்த மக்கள் அடுத்தடுத்து உயிரிழக்க, “நாம் கடவுளை நம்பினோம், ஆனால் கடவுள் எங்களை காப்பாற்றவில்லை” என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றுகிறது.
இப்படியே நாடு முழுவதும் பரவி வரும் அந்த வைரஸுக்கு மருந்தை கண்டுபிடிக்கும் பொறுப்பு, விஞ்ஞானி ஜனனியின் தோள்களில் விழுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு, அந்த வைரஸுக்கு மருந்தை ஜனனி கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால் அந்த உண்மை எதிரி கூட்டத்துக்கு தெரிந்ததும், விஞ்ஞானிகள் குழுவில் உள்ள அனைவரையும் கொடூரமாக கொன்று குவிக்கிறார்கள். ஜனனியையும் உயிரோடு விடாமல் துரத்துகிறார்கள். இந்த தருணத்தில் தான், அகண்டா மீண்டும் வருகிறாரா?, தன் சத்தியத்தை நிறைவேற்றுகிறாரா?, கடவுள் நம்பிக்கை மீண்டும் மக்களிடம் திரும்புகிறதா? என்பதே அகண்டா 2-ன் மீதிக் கதை. இந்த படத்தில் கதாநாயகன் என்றால் அது பாலகிருஷ்ணா மட்டுமே.
மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல் மொழி, வசனங்களில் அவரது கம்பீரம், டான்ஸ் காட்சிகளில் அவரது எனர்ஜி, எல்லாமே பாலய்யா ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. “வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே” என்பதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிரூபிக்கிறார் பாலகிருஷ்ணா. ஆக்ஷன் காட்சிகளை விட, இந்த படத்தில் பாலகிருஷ்ணா வசனங்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். கடவுள், நம்பிக்கை, தர்மம், தேசபக்தி குறித்து அவர் பேசும் வசனங்கள், திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில்களையும் பெற்றது. “லாஜிக் கேட்காதீங்க… இது அகண்டா” என்று படம் மறைமுகமாக சொல்வது போலவே, பாலய்யாவின் வசனங்கள் முழுக்க முழுக்க மாஸ் ரசிகர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. படத்தின் மிகப்பெரிய குறை என்றால், வில்லன் கதாபாத்திரம்.

வில்லன் எவ்வளவு பெரிய தீய சக்தி என்று காட்டினாலும், அவர் பாலகிருஷ்ணாவை வீழ்த்த எந்த ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தையும் போடவில்லை. வில்லன் கதாபாத்திரம், பாலய்யாவுக்கு பில்டப் கொடுக்க மட்டுமே பயன்படுகிறது என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை. படத்தில் திடீரென, தீய சக்தியின் முழு உருவம் போல ஆதி என்ட்ரி கொடுக்கப்படுகிறது. ஆனால் அவரும் அதிக நேரம் நிலைக்காமல், பாலய்யாவால் அசால்டாக “இடது கையில்” டீல் செய்யப்படுகிறார். இந்த பகுதி இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.
அகண்டா 2-ல் லாஜிக் தேடினால், “இது பாலய்யா படம்” என்று படம் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறது. இங்கு எல்லாம் Logic இல்லை – Only Balayya Magic என்ற ஒரே விதி தான். அதுமட்டுமல்லாமல் இடைவேளை காட்சியில் வரும் அகண்டா கம்பேக், அம்மாவுடன் சிவன் பேசும் காட்சி, இவை எல்லாம் படத்தின் ஹை பாயிண்ட்ஸ். இந்த காட்சிகள், பாலய்யா ரசிகர்களுக்கு goosebumps moments. எனவே அகண்டா என்ட்ரிக்குப் பிறகு திரைக்கதை வேகம் பிடித்தாலும், பல இடங்களில் தேவையற்ற காட்சிகள் காரணமாக தொய்வு ஏற்படுகிறது. படத்தின் நீளத்தை 15-20 நிமிடங்கள் குறைத்திருந்தால், இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது தமனின் பின்னணி இசை. ஒவ்வொரு அகண்டா காட்சிக்கும், தமன் கொடுத்த BGM, திரையரங்கையே அதிர வைத்துள்ளது. ஒளிப்பதிவு – படத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது. எடிட்டிங் – இன்னும் சிறப்பாக இருக்கலாம், VFX – ஓகே ரேஞ்ச், சண்டை காட்சிகள் – வழக்கமான பாலய்யா ஸ்டைல். இப்படியாக படத்தின் மைனஸ் என பார்த்தால், படத்தின் நீளம், லாஜிக் இல்லாத திரைக்கதை, வலுவற்ற வில்லன், மீண்டும் மீண்டும் வரும் வழக்கமான சண்டை காட்சிகள் தான்.

இப்படியாக அகண்டா 2 என்பது பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு ஒரு முழு நீள மாஸ் விருந்து. ஆனால், பாலய்யா ரசிகர்களை தாண்டி, பொதுவான ரசிகர்களுக்கு இந்த படம் சற்று சோதனையாகவே இருக்கும். மொத்தத்தில், இந்த படத்தில் லாஜிக் இல்லை என்றாலும் மேஜிக் செய்ய நம்ப பாலைய்யா இருக்கிறார்.
இதையும் படிங்க: என்னை திருமணம் செய்ய நினைப்பவர் இதை கண்டிப்பாக இழக்கனும்..! நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டம்..!