சினிமா உலகின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான 82-வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை வெனிஸ் லிடோவில் சிறப்பாக நடைபெற்றது. உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெறும் இந்த விழாவில், இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விழாவில் "சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ்" எனும் திரைப்படத்திற்காக அனுபர்ணா ராய் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற முதல் இந்தியராக அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுமார் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம், உணர்ச்சி பூர்வமான படைப்பாகவும், இயற்கையுடன் மனிதனின் உறவை சிந்திக்க வைக்கும் உன்னதக் காட்சிப்படையாகவும் பாராட்டப்படுகிறது. ‘சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ்’ என்பது அனுபர்ணா ராயின் முதல் முழுநீள திரைப்படமாகும். இதற்கு முன், இவர் ‘ரன் டு தி ரிவர்’ எனும் குறும்படத்தை இயக்கி, திரைப்பட உலகில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழா கடுமையான போட்டி சூழலில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சிறந்த படைப்புகள் பரிசீலனைக்கு வந்திருந்த நிலையில், அனுபர்ணா ராயின் படம் குறிப்பிடத்தக்க முறையில் கவனம் ஈர்த்தது. கதையின் தாழ்மையான நடை, இயற்கையின் அழகு மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை மெல்லிய நுணுக்கத்துடன் சித்தரித்திருக்கும் விதம், திரை விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் அனுபர்ணா ராய் மேடையில் விருதை பெற்றபோது, “இந்த வெற்றியை என் நாட்டிற்கும், என் நாட்டின் கதைகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த குரலை கேட்கும் வாய்ப்பு கொடுத்த வெனிஸ் திரைப்பட விழாவுக்கு நன்றி” என்று உருக்கமாக கூறினார். இந்த நிலையில் அனுபர்ணா ராயின் வெற்றிக்கு, பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபல நடிகை ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “‘சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ்’ எனும் படத்திற்காக வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற அனுபர்ணா ராய்க்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.

இந்திய சினிமாவுக்கு என்ன அழகான ஒரு தருணம். வாழ்த்துகள் அனுபர்ணா ராய்” என்று தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், பல திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், மற்றும் விமர்சகர்கள், இந்த வெற்றியை இந்திய சினிமாவின் புதிய பரிணாமம் என கூறி வருகின்றனர். இந்த "சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ்" என்பது மரங்களின் நினைவுகள், தொலைந்துபோன இயற்கையின் அழகு மற்றும் நகரமயமாதலால் உண்டாகும் மனித தனிமையை விவரிக்கிறது. கதை நகரும் விதம் கவிதைப் போல அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும், பார்வையாளர்களை ஒரு தனித்த அனுபவமாக அழைத்துச் செல்கிறது. திரைப்படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளன. இந்த வெற்றி, உலகளவில் இந்திய சினிமாவுக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, பெண்கள் இயக்குனர்களுக்கான வாய்ப்புகள், சுய பாணியில் படைப்புகளை உருவாக்கும் இயக்குனர்களின் முயற்சிகளுக்கு இது ஒரு உற்சாகமான முன்னோடி என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: என்ன பேசுறீங்க நீங்க...எங்க பிரச்சனை நடந்தாலும் காரணம் இந்துக்களா..! மந்திரிக்கு கன்னட நடிகை கண்டனம்..!
அனுபர்ணா ராய் வெற்றி பெற்றுள்ள இந்த விருது, வெனிஸ் திரைப்பட விழாவின் ‘சில்வர் லயன் ஃபார் பெஸ்ட் டைரக்டர்’ விருதாகும். இது உலக சினிமாவில் மிக முக்கியமான விருதாக கருதப்படுகிறது. விருது பெற்ற பிறகு செய்தியாளர்களுடன் பேசும் போதே, அனுபர்ணா பேசுகையில், “இந்த வெற்றி எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே. எனது அடுத்த படைப்புகள், இந்த மண் சொல்கின்ற கதைகளை மேலும் உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் என நம்புகிறேன். என் கதைகளில் பேசுவது நம்மை சுற்றியுள்ள இயற்கையும், அதன் அழிந்துபோன அம்சங்களும் தான்.” என்றார். இந்த திரைப்படம் வெனிஸ் விழாவில் முதல் முறை திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உலகம் முழுக்க சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் பாராட்டுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய சினிமாவில் உள்ள பல புது தலைமுறை இயக்குனர்களின் முயற்சி, தனித்துவம், மற்றும் உலக அரங்கில் கதைகளை சொல்லும் முயற்சி நிறைந்துள்ளதாக தெரிகிறது.

ஆகவே அனுபர்ணா ராய் வென்றுள்ள இந்த விருது, இந்திய சினிமாவின் மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. ‘பாக்ஸ் ஆபிஸ்’ வெற்றிகளைத் தாண்டி, கலை சினிமாவுக்கும், தனிப்பட்ட குரல்களுக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவையை உலக அரங்கில் வலியுறுத்துகிறது. இப்படியான ஒரு சாதனை, மேலும் பலருக்கு உற்சாகம் தரும், நம்பிக்கையை ஊட்டும் நிகழ்வாகும். அனுபர்ணா ராயின் வெற்றி, இந்திய சினிமாவுக்கே ஒரு புதிய திசையைக் காட்டும் ஒளிக்கதிராக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரவிமோகனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா..! பிறந்த நாள் அன்று சுதாகொங்காரா பதிவு வைரல்..!