சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (Regional Meteorological Centre - RMC) புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை (Sivananda Pai) இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இப்பதவியில் இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சிவானந்த தாமோதர பை இந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1992-ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகத் தனது பணியைத் தொடங்கிய இவர், சுமார் 34 ஆண்டுகால நீண்ட பணி அனுபவம் கொண்டவர். நீண்டகால வானிலை முன்னறிவிப்பு (Long-range forecasting) மற்றும் பருவமழை குறித்த ஆய்வுகளில் இவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராகக் கருதப்படுகிறார். குறிப்பாக, இந்தியாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த இவரது கணிப்புகள் மிகவும் துல்லியமானவை.

இதற்கு முன்னதாக புனேவில் உள்ள தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், எல்-நினோ மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனை தாக்கம் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: குடையோட வெளில போங்க.. மார்ச் 4ம் தேதி வரை மழை இருக்காம்..!! வானிலை அப்டேட்..!!
தற்போது தமிழகத்தில் கோடை மழை தொடங்கி மார்ச் 23-ல் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் சூழலில், இவர் பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களின் வானிலை மாற்றங்களைக் கண்காணித்து உடனுக்குடன் முன்னறிவிப்புகளை வெளியிடுவதே இவரது முதன்மைப் பணியாகும்.
இதையும் படிங்க: சென்னை அருகே சிலிண்டர் வெடித்து விபத்து! இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் மரணம்...!