‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதியான நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த சூழலில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என நடிகர் சந்தானம் மீதும் மே16ம் தேதி வெளியாகவுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் மீதும் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். அவர்களை தொடர்ந்து, திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீதும் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஜனசேனா கட்சியினர்.
இதையும் படிங்க: கணவரை கலாய்த்த நடிகர்.. கடுப்பான தேவயானி.. உண்மையை சொல்லி சரண்டரான சந்தானம்..!

இதனை அடுத்து, 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பெருமாள் பாடலை நீக்கக் கோரி, நடிகர் சந்தானம் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை குறித்து நடிகர் சந்தானத்திடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த சந்தானம், சட்டரீதியாக நீதிமன்றம் மற்றும் போர்டுக்கு மட்டுமே கட்டப்பட முடியும். சும்மா ரோட்டில் போகின்றவர்கள் வருகிறவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் சர்ச்சை குறித்து பேசிய கூல் சுரேஷ், ‛‛என் நண்பன் சந்தானம் அதீத கடவுள் பக்தி உடையவர். உதாரணத்திற்கு அவர் காரில் எப்பொழுதும் சாமி படங்களும் வேப்பிலையும் இருக்கும். அவர் போய் "கோவிந்தா" பாடலை அவமதிப்பாரா. ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அந்த பாடலை படத்தில் வைத்ததற்காக எதிர்க்கிறார்கள். இதனை காரணம் காட்டி திருப்பதிக்குள் தமிழர்களை விடமாட்டோம் என்கிறார்கள். இது தவறு. நீங்கள் அங்கு விடவில்லை என்றால் நாங்கள் திருப்பதி பெருமாள் படத்தை வீட்டில் வைத்தே கும்பிடுவோம். ஆதலால் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் நீங்களும் ஒரு நடிகர்தான். உங்களுக்கும் சினிமாவில் உள்ளவர்கள் கஷ்டம் தெரியும்.

படம் வெளிவருவதற்கு முன்பே குறை சொல்ல கூடாது. முதலில் படம் வெளியான பின் அதனை பவன் கல்யாணும் அவரது தரப்பும் பார்த்துவிட்டு அதன் பின் பேச வேண்டும். அதன்பின் ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் என் நண்பன் சந்தானத்தின் படத்துக்கு எந்த வித பிரச்சனைகளும் வர வேண்டாம். அது நல்ல படியாக ரிலீஸ் ஆக வேண்டும். அதனால் பவன் கல்யாண் அவர்களே... நான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்" என மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ்.

இதனை பார்த்த பலரும் தவறு இருந்தால் மன்னிப்பு கேளுங்க ஏன் நீங்களாகவே சென்று மன்னிப்பு கேட்டு படத்தை குறையுள்ளதாக மாற்றுகிறீர்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு கொடுப்பியா..? சந்தானம் மீது ரூ.100 கோடி மானநஷ்டஈடு வழக்கு போட்ட பாஜக..!