The Show Must Go On மற்றும் Black Madras Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும், வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கிய புதிய தமிழ் திரைப்படமான “மாஸ்க்”, வரும் நவம்பர் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். S.P. சொக்கலிங்கம் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமியா இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் என்டர்டெய்னராக பேசப்படுகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ருஹானி சர்மா பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் நாள். இந்த நாளுக்காக இரண்டு வருடங்களாக காத்திருந்தேன். வெற்றிமாறன் சார் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையின் முக்கிய தருணம். விஜய் சேதுபதி சார் வாழ்த்த வருவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் விகர்ணன் எனக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் தந்ததற்கு நன்றி. கவின் ஒரு சிறந்த கோ-ஸ்டார். ஆண்ட்ரியா ஒரு மிகச்சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு திறமையான தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை சூப்பர்.. நவம்பர் 21 அன்று அனைவரையும் திரையரங்கில் சந்திப்போம்” என்றார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் பவன், “இந்தப்படத்தில் நான் கஷ்டப்பட்டதே இல்லை, கஷ்டம் எல்லாம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான் அனுபவித்தார்கள். நான் அரசியல்வாதி கதாபாத்திரம் ஏசியிலேயே நடித்தேன். ரெடின் கிங்ஸ்லி ஒரு காட்சி பார்த்தேன் – அட்டகாசமாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றி சார் கடை சாத்துவார் என்றார், ஆனா இந்த படத்துக்குப் பிறகு பல கடைகள் திறப்பார்! ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசுகையில், “விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவர் வெற்றிமாறன் வழிகாட்டுதலில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். எம்.ஆர். ராதா சார் போன்ற ஒரு புரட்சிகர குரலை மீண்டும் திரையில் கொண்டு வந்தது பெருமை. ஆண்ட்ரியா பாடுகிறார், நடிக்கிறார், இப்போது தயாரிக்கிறார் – அடுத்தது இயக்கி விடுவார் என்ற நம்பிக்கை. கவின் ஒரு ஆண் கவிதை போல இருக்கிறார். மாஸ்க் படம் ‘டாடா’க்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் பேசுகையில், “மாஸ்க் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இதை வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். கவின், ஆண்ட்ரியா, ருஹானி – மூவரும் மிக அழகாக நடித்துள்ளனர். வெற்றிமாறன் சார் ஷூட்டிங்கில் அரிதாக வந்தாலும், அவரின் வழிகாட்டுதல் எப்போதும் இருந்தது. ஜீவி பிரகாஷ் இசை படத்தின் உயிராக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: தொடரும் பிரபலங்களின் மரணம்..! பாலிவுட் சினிமா நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசுகையில், “எனக்கு வாய்ப்பு தந்த சொக்கலிங்கம் சார் மற்றும் விகர்ணனுக்கு நன்றி. படம் மிக அழகாக வந்துள்ளது. கலைக்குழுவின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்” என்றார். எடிட்டர் R. ராமர் பேசுகையில், “வெற்றி சார் என்னை ஏமாற்றிவிட்டார், ஆனால் மாஸ்க் படத்தால் ஆச்சரியப்படுத்தினார். ஜீவி பிரகாஷ் இசையால் படம் உயிர் பெற்றுள்ளது. கவின் மிகப் பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ருஹானி சர்மா – திரையில் டாப்ஸி போல் நினைவூட்டுகிறார்” என்றார். இவர்களை தொடர்ந்து நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், “விகர்ணன் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி எடுத்துள்ளார். பவன் ஒரு நல்ல டான்சர், ஆனால் இப்போது வில்லன். ஜீவி சார் இசை அசத்தல். ஆண்ட்ரியா மேடமுக்கு இந்த படம் நிறைய வெற்றி கொடுக்கட்டும். கவின் அனைவரையும் அணைத்துக்கொள்வார், அவர் இந்த படத்தால் பெரிய உயரம் அடைவார்” என்றார்.
பின்பு பேசிய இயக்குநர் நெல்சன், “விகர்ணன் கதை கேட்டபோது அதிர்ச்சி அடைந்தேன் – இது வெற்றிமாறனின் கதை போலவே இருக்காது. ஆனால் கதையில் புதுமை, நுணுக்கம் இரண்டும் உண்டு. கவின் நம்பிக்கையுடன் கதை தேர்ந்தெடுத்துள்ளார் – இது அவருக்கு நீண்ட பயணத்தின் தொடக்கம். ஜீவி இசை மிரட்டல்” என்றார். விழாவில் முக்கிய நாயகனான இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், “மாஸ்க் டீமில் எல்லோரும் எனக்கு நெருங்கியவர்கள். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆர்.டி. ராஜசேகர் எனது கனவு ஒளிப்பதிவாளர் – அவருடன் வேலை செய்தது பெருமை. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக மாற வாழ்த்துக்கள்” என்றார். நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா கூறுகையில், “நான் பல வருடங்களாக விழாக்களுக்கு வரவில்லை. மாஸ்க் எனக்கு ஒரு சிறப்பு படம். கவினுக்கும் இது முக்கியமான படம். எங்கள் மெண்டார் வெற்றிமாறன் சார் எங்களுக்கு வழிகாட்டியவர். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவால் அனைவரும் அழகாகத் தெரிகிறோம். நவம்பர் 21 திரையில் சந்திப்போம், அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
அடுத்து இயக்குநர் விகர்ணன், “என்னுடைய வாழ்க்கையில் இந்த நாள் வருமென்று நினைக்கவில்லை. ஆண்ட்ரியா மேடம் தான் எனது கதையை வெற்றிமாறன் சாரிடம் கொண்டு சென்றார். சொக்கலிங்கம் அண்ணா எனக்கு இரண்டாவது தந்தை. கவின் – மிகச்சிறந்த நடிகர். அவர் நல்லவனும் கெட்டவனும் சேர்ந்து வாழும் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்துள்ளார். வெற்றிமாறன் சார் எனது மெண்டார். அவரின் ஆலோசனைகள் எனக்கு திசை தந்தன” என்றார். பின்பு நகைச்சுவையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “விகர்ணன் பேச்சே ஒரு படம்தான். வெற்றிமாறன் உண்மையான மாஸ்டர். மாஸ்க் டிரெய்லர் பார்த்தேன் – அற்புதமாக உள்ளது. கவின் தேர்ந்தெடுத்த கதை வித்தியாசமானது, அது அவரை மேலே கொண்டு செல்லும். ஆண்ட்ரியா இன்னும் அதே அழகு, ருஹானி அழகாக நடித்துள்ளார். ஜீவி இசை மிரட்டல். சொக்கலிங்கம் சார் மற்றும் விகர்ணனுக்கு வெற்றி நிச்சயம்” என்றார். நடிகர் கவின் பேசுகையில், “விஜய் சேதுபதி சார் எனது ஊக்கமூட்டல். வெற்றிமாறன் சார் எனை அழைத்தது கனவு நனவானது. ஆண்ட்ரியா மேடம், ஜீவி சார், விகர்ணன் – அனைவரின் உழைப்பால் மாஸ்க் ஒரு சிறந்த படம் ஆனது. நவம்பர் 21 திரையில் பார்க்க வருங்கள்” என்கிறார்.

இறுதியாக பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “மாஸ்க் படம் எனக்கு புதிய அனுபவம். ஆண்ட்ரியா எனக்கு திரைக்கதை அனுப்பியபோது அதில் இருந்த ஆழமான சிந்தனை எனை கவர்ந்தது. கவின் நடிப்பு மிகச் சிறப்பு, விகர்ணன் கதை சொல்லும் விதம் அசாத்தியம். ஜீவி பிரகாஷ் இசை, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு, ராமர் எடிட்டிங் – அனைத்தும் ஒரே அளவில் பிரமாண்டம். எம்.ஆர். ராதா சார் பேசிய “குரலற்றோரின் குரல்” என்ற சிந்தனையே இப்படத்தின் ஆன்மா. ஆண்ட்ரியா, சொக்கலிங்கம் இருவரும் ஜெயிக்க வேண்டும் – அதுவே எனது ஆசை” என்றார். ஆகவே “மாஸ்க்” படம் வரும் நவம்பர் 21, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் விகர்ணனின் கதையையும், வெற்றிமாறனின் மேற்பார்வையையும் இணைக்கும் இந்தப் படம், தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய கமர்ஷியல் பரிமாணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஷார்ட் உடையில்.. கவர்ச்சியூட்டும் அழகில் நடிகை அமலா பால்..!