தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தன் தனித்துவமான நடிப்பால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றவர் தான் நடிகை நித்யா மேனன். தமிழில் தனுஷுடன் நடித்த 'திருச்சிற்றம்பலம், இட்லி கடை', ரவி மோகனுடன் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார். தற்போது, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘தலைவன் தலைவி’ படம் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பையும் விமர்சன ரீதியாக அதிகளவு பாராட்டுகளையும் பெற்று உள்ளது. இப்படி சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று கொண்டிருக்கும் நேரத்தில், தன்னுடைய வாழ்க்கைப் பயணம், காதல் அனுபவங்கள், திருமணம் குறித்த பார்வை, ஆன்மீகம் உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி மூலமாக பகிர்ந்துள்ளார் நித்யா மேனன்.
அதன்படி அவர் பேசுகையில், " என் வாழ்க்கையில் முதலில் பாட்டி தான் என் அம்மா.. நான் மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது, என் அம்மா என்னை பாட்டியின் மடியில் வைத்து வேலைக்குச் சென்றார். அப்போது என் அம்மாவின் இடத்தை பாட்டி நிரப்பினார். அவரே என் முதல் பாதுகாவலராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் என் இதயம் பலமுறை சுக்கு நூறாக உடைந்தது... ஏனெனில் எனக்கான ஆத்ம துணையை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டே இருந்தேன்.. நான் ஒரு வித்தியாசமான பெண். என் வாழ்வில் காதலானது ஒரு கட்டத்தில் வந்தது. ஆதலால் பல முறை நான் அந்த காதலுக்கு இடம் கொடுத்தேன். ஆனால், எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அவ்வளவுமே என் இதயத்தை சுக்குநூறாய் உடைத்து போட்டது. உண்மையிலேயே எனக்கென ஒரு ஆத்ம துணை வேண்டும். அவருடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவுகள் அதிகமாக இருந்தன. ஆனால், அந்த கனவுக்கேற்ப யாரும் என் வாழ்க்கையில் வரவே இல்லை.

ஆதலால் இப்போது நான் எல்லா உணர்வுகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன். திருமணமே செய்ய மாட்டேன் என்று நினைத்து வாழ்வதில்லை. ஆத்ம துணை கிடைத்தால் நாளைக்கே திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், தற்போது தனிமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. திருமணம் இல்லையெனில்... அதைவிட மகிழ்ச்சி. ஏன்? ரத்தன் டாட்டாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபோல் நானும் தனிமையை ரசிக்கிறேன். திருமணம் நடந்தால் மகிழ்ச்சி... நடக்கவில்லை என்றால் அதைவிட மகிழ்ச்சி.. அவ்வளவு தான்.. அதுமட்டுமா.. தற்போது நான் அதிகளவு ஆன்மீக பாதையை பின்பற்றுகிறேன். ஆன்மீகம் மூலம் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு எனக்கு பதில் கிடைத்துள்ளது. உணர்வுகளை சமநிலைப்படுத்தும் வழியையும் புதியதாக கண்டுபிடித்துள்ளேன்" என வெளிப்படியாக பேசியிருக்கிறார் நித்யா மேனன்.
இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!
எவ்வளவு தான் பணம், புகழ், பெயர் என இருந்தாலும் தனிமை அனைவரையும் சூழும் பொழுது புலம்பி தான் ஆக வேண்டும். ஆனாலும் இந்த தனிமையின் அழகு, நிம்மதி, ஆன்மீகம், மனவலிமை இவை அனைத்தும் தற்போது நித்யாவின் வாழ்க்கையின் முக்கிய பாகங்களாக தற்பொழுது மாறி உள்ளன. அவரது நேர்மை, எதார்த்தமான பார்வை, வாழ்க்கையை திட்டமிடாமல் அதன் ஓட்டத்தில் அமைதியாக நகரும் மனநிலை என இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பலரிடமும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பலரும், "அது உங்கள் வாழ்க்கை... உங்கள் விருப்பம்" , "நித்யா மேனன் பேசியது எங்கள் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது" என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

திருமணம் ஒரு விருப்பம்தான் ஆனால் கட்டாயம் அல்ல என்பதை தெளிவாகக் கூறும் நித்யா மேனன் போன்ற பிரபலங்களின் குரல்கள், சமூக அழுத்தங்களால் பாதிக்கப்படும் பலர் மனதில் ஒளி ஏற்றுவதாக பார்க்கப்படுகிறது. அதுவும், "தனிமை என்பது தண்டனை அல்ல.. மகிழ்ச்சி தேடும் ஒரு வழி தான்" என்பதை அவர் உணர்த்திய விதம் அருமையாக இருந்தது.
இதையும் படிங்க: தேசிய விருது பெறுவதற்கு முன் கையில் மாட்டு சாணம் வைத்திருந்தேன்..! நடிகை நித்யா மேனன் பேச்சால் பரபரப்பு..!