தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த நடிகர் பிரியதர்ஷி. ‘பெலிச்சி’, ‘ஜாத்திரத்நாலு’, ‘மஜிலி’, ‘பாலகிருஷ்ணா’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த நடிப்பால் ரசிகர்களிடம் பிரபலமான இவர், தற்போது தனது புதிய திரைப்படமான ‘மித்ர மண்டலி’ மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். இந்தப் படம் ஒரு நகைச்சுவை.. நட்பு.. உறவுகள் சார்ந்த கதை கொண்டது என்று கூறப்படுகிறது. அறிமுக இயக்குநர் விஜயேந்தர் எஸ் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படி இருக்க பிரியதர்ஷி தனது பல முன்னைய படங்களில் நகைச்சுவையையும் உணர்ச்சியையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் ‘மித்ர மண்டலி’ படம் அவருக்கே ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தின் கதையின் மையத்தில் நாலு நண்பர்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இடையிலான மோதல்கள் ஆகியவை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளன. இதை நகைச்சுவை பாணியில் திரையில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜயேந்தர். இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளவர் நிஹாரிகா என்.எம். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த நகைச்சுவை வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். அவரது வித்தியாசமான எக்ஸ்பிரஷன்கள், கூர்மையான நகைச்சுவை மற்றும் பேச்சுத் திறமையால், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இப்படியாக ‘மித்ர மண்டலி’ படம் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் முழுநீள நடிகையாக அறிமுகமாகிறார்.
நிஹாரிகா நடித்த காட்சிகளில் இயல்பான நகைச்சுவை மிகுந்து காணப்படுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் ‘மித்ர மண்டலி’ திரைப்படத்தை சப்தா அஸ்வா மீடியா ஒர்க்ஸ் மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. திரைப்படத்தை பிவி ஒர்க்ஸ் நிறுவனம் வழங்குகிறது. தயாரிப்பாளராக பிரபலமான பன்னி வாஸ் பணியாற்றியுள்ளார். படத்தின் இசையை ஆர்ஆர் துருவன் அமைத்துள்ளார். அவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒளிப்பதிவு பணிகளை சுந்தர் ரெட்டி, எடிட்டிங் பணிகளை மார்த்தாண்டு கே. வெங்கட் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘மித்ர மண்டலி’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா மிகவும் உற்சாகமாக நடந்தது. அதில் நடிகர் பிரியதர்ஷி பேசும்போது வெளியிட்ட கருத்து ரசிகர்களையும், ஊடகங்களையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிங்க: "Adults Only"... இது எதிர்பார்த்தது தான...! 'யுக்தி தரேஜா' படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்... அவ்வளவு தான் முடிச்சிட்டாங்க போங்க..!

அதன்படி அவர் பேசுகையில், “இந்த படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. நான் இதுவரை நடித்த படங்களில் இதுதான் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால், உங்களுக்கு ‘மித்ர மண்டலி’ பிடிக்கவில்லை என்றால், எனது அடுத்த படத்தைப் பார்க்கவேண்டாம்” என தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த வார்த்தைகள் உடனே ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை நம்பிக்கையின் வெளிப்பாடாக பார்த்தனர், சிலர் இதை பெருமை கலந்த சவால் எனக் கூறினர். விழா முடிந்த பின், ஊடகங்கள் அவரது அந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, பிரியதர்ஷி சிரித்தபடி விளக்கம் அளித்தார். அதில், “நான் அதை ஒரு சவாலாக அல்ல, ஒரு நம்பிக்கையாக கூறினேன். ‘மித்ர மண்டலி’ படம் மிகவும் மனம் நிறைந்த நகைச்சுவை படம். இதைப் பார்த்தவர்கள் எனது நடிப்பில் ஒரு புதிய பக்கத்தை காண்பார்கள். இந்த படம் ஒரு நகைச்சுவை திரைப்படம் மட்டுமல்ல, அது நட்பு மற்றும் வாழ்க்கையின் உண்மைகள் பற்றிய கதையாகும். ஒவ்வொருவருக்கும் இதில் தங்களின் வாழ்க்கை நினைவுகள் தோன்றும்” என்றார்.
மேலும் ‘மித்ர மண்டலி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிரியதர்ஷி மற்றும் நிஹாரிகா ஆகியோரின் காமெடி டைமிங், நண்பர்கள் குழுவின் சண்டைகள், உணர்ச்சி பூர்வமான உரைகள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூபில் வெளியான அந்த டிரெய்லர் 48 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகள் பெற்றுள்ளது. படத்தின் இசை ஆல்பம் கடந்த வாரம் வெளியானது. அதில் ‘நா மித்ர மண்டலி, ஹாய் லைஃப், பேஸ்ட் ஃபிரண்ட் டயலாக்’ போன்ற பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இசையமைப்பாளர் ஆர்ஆர் துருவனின் நவீன பீட்ஸ், யூத் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. ‘மித்ர மண்டலி’ படத்தின் முக்கிய கரு நட்பு தான். ஆனால் அது வழக்கமான கல்லூரி கதை அல்ல. இதில் நட்பு, குடும்பம், சமூகப் பார்வைகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. அதை நகைச்சுவை பாணியில் சொல்லும் போது கூட, கதையின் ஆழம் குறையாமல் இருக்கிறது என்பதுதான் இயக்குநர் விஜயேந்தரின் வித்தியாசம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த விழா மேடையில் இயக்குநர் விஜயேந்தர் பேசுகையில், “நட்பு என்பது ஒரு காலவரையற்ற உணர்வு. இன்று நவீன உலகில் கூட, உண்மையான நண்பர்கள் அரிதாகி வருகின்றனர். அந்த உண்மையான நட்பின் சக்தியை, அதில் இருக்கும் நகைச்சுவையை, உண்மையையும் காட்டும் முயற்சி தான் ‘மித்ர மண்டலி’. பிரியதர்ஷி இந்த படத்தில் ஒரு புதிய முகம். அவர் நடிப்பை மக்கள் விரும்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார். ‘மித்ர மண்டலி’ படத்தின் டீமிடம் இருந்து வெளிவந்த சாம்பிள் காட்சிகள், பாடல்கள், பிரியதர்ஷியின் பேச்சு ஆகியவை தற்போது தெலுங்கு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அக்டோபர் 16-ம் தேதி உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. ஆகவே ‘மித்ர மண்டலி’ படத்தைச் சுற்றி உருவான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரியதர்ஷி கூறிய அந்த ஒரு வரி- “படம் பிடிக்கவில்லை என்றால், என் அடுத்த படத்தைப் பார்க்கவேண்டாம்” என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், சிலர் இதை ஒரு கலைஞனின் நம்பிக்கை கூற்று என கருதுகின்றனர். பிரியதர்ஷியின் நடிப்பு, நிஹாரிகா என்.எம்-ன் அறிமுகம், விஜயேந்தரின் இயக்கம், துருவனின் இசை – இவை அனைத்தும் சேர்ந்து ‘மித்ர மண்டலி’யை ஒரு உணர்ச்சிமிக்க நகைச்சுவை படமாக உருவாக்கியுள்ளன. எனவே வருகிற அக்டோபர் 16, இந்த நட்பு என நகைச்சுவை கொண்டாட்டம் திரையரங்குகளில் எவ்வாறு ரசிகர்களை கவர்கிறது என்பதை அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இப்படியா போய் ஏமாறுவாங்க...! மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பணிந்து ரூ.17 லட்சத்தை தவறவிட்ட சௌந்தர்யா..!