சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மதிமுகவுக்கு திமுக 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மை செயலர் துரை தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
திமுக தரப்பு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள், தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்தது. இதனால் வைகோ அதிருப்தி அடைந்தார். ராஜ்யசபா சீட் கூட தரப்படாதது கோபத்தை அதிகரித்தது. துரையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் "திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்" என்று பதிவிட்டு நெருக்கடி கொடுத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பிரசாரம் செய்ய ராகுல்காந்தி தயக்கம்!! திமுக, காங் கூட்டணியில் சர்ச்சை! பின்னணியில் விஜய்?!

இந்த சூழலில் சென்னை எழும்பூரில் மதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி கிடைத்துள்ளது.
வைகோ கூறுகையில், "நான்கு தொகுதிகள் கிடைத்தது மகிழ்ச்சி. கட்சியின் பதிவு அங்கீகாரத்தை தக்க வைக்க ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மற்ற மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்" என்றார்.
தமிழகத்தில் மதிமுகவின் தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது, 1996-ல் 177 தொகுதிகளில் தனி அணியாகவும், 2001-ல் 211 தொகுதிகளிலும் போட்டியிட்டது. 2006-ல் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகள், 2016-ல் மக்கள் நலக்கூட்டணியில் 28 தொகுதிகள், 2021-ல் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கிடைத்தன. 2011-ல் தேர்தலை புறக்கணித்தது. இப்போது 2026-ல் 4 தொகுதிகளுடன் கூட்டணியில் தொடர்கிறது.
இந்த ஒப்பந்தம் திமுக-மதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுகவின் தனிச்சின்ன கோரிக்கைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு துவங்குவதில் முட்டுக்கட்டை! விஜயை உள்ளிழுக்க விரும்பும் அமித்ஷா!! இபிஎஸ் அதிருப்தி!