இந்திய திரையுலகில் தற்போது பல நடிகைகள் வலம் வந்தாலும், கோலிவுட் முதல் பாலிவுட்டில் வரை மிகவும் ஃபேமஸான நடிகை என்றால் அவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது 'நேஷனல் கிரஷ்' என அழைக்கப்படும் அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்து கொண்டு புகழின் உச்சியில் இருக்கிறார். அவரது நடிப்பு, அழகு, எளிமையான அணுகுமுறை மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமான ஈடுபாடு முதலானவைகளால், அவர் பல இளசுகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கிறார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் சாதனை படைத்துள்ளன. குறிப்பாக 2023மற்றும் 2024 காலப்பகுதியில் அவர் நடித்த 'புஷ்பா', 'வாரிசு', மற்றும் 'அனிமல்' போன்ற படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளன.
இதுகுறித்து, பிரபல நடிகர் நாகார்ஜூனா கூட சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில், "பல ஹீரோக்களால் கூட முடியாத வசூலை, ஒரு ஹீரோயின் செய்து காட்டுகிறார். அது தான் ராஷ்மிகா! இது அவரது சினிமா பயணத்தில் மிகப் பெரிய சாதனை" என பாராட்டினார். இந்தக் கருத்து சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதமாகி, ராஷ்மிகாவின் மார்க்கெட் மதிப்பை மேலும் உயர்த்தியது. பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் இவரை மிகப்பெரிய ஹீரோயினாக கருதி புதிய பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகின்றன. இப்படி இருக்க, ராஷ்மிகா சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில், 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'ரண்விஜய்' கதாபாத்திரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி தொகுப்பாளர் கேட்கையில் " அந்தக் கதாபாத்திரம் போன்று இருக்கும் ஒருவருடன் நிஜஉலகில் நீங்கள் டேட் செய்வீர்களா?” என்று கேட்க, அதற்கு ராஷ்மிகா சற்றும் தயங்காமல் " நிச்சயமாக டேட்டிங் செய்வேன். யாராவது ஒருவரை நீங்கள் உண்மையாக காதலித்தால், அவர்களும் உங்களை உண்மையாக காதலித்தால், நிச்சயம் மாற்றம் வரும் அல்லவா.." என பதிலளித்தார்.

இந்த வார்த்தைகள் பலரை ஆச்சரியப்பட வைத்ததோடு, சமூக வலைதளங்களில் பலரது கருத்துகளையும் எதிர்மறையாக பெற்று வருகிறது. அதிலும், அனிமல் படத்தின் கதாபாத்திரமான ரண்விஜய், ஒரு 'டாக்ஸிக் லவர்' என்று சித்தரிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்-படத்தில் அவர் பொது வாழ்க்கையில் உள்ள ஒழுக்க முறைமையினை மீறி நடந்துகொள்வதும், ஆணாதிக்கப் போக்கையும், உணர்ச்சி அடங்கா குணாதிசயத்தையும் அப்பட்டமாக காட்டியிருந்தார்.
இத்தகைய கதாபாத்திரம் யாரையும் ஈர்க்கக்கூடாது என சமூக ஊடகங்களில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தன. அந்தக் கதாபாத்திரத்தை நேரடியாக ஆதரிக்கிறவாறு ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார் என்பதால், 'வாழ்க்கையில் அவ்வாறு நடத்தும் ஆட்கள் பாதுகாப்பற்றவர்கள்' என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இதனால் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!
அப்படி என்ன ட்ரோல் செய்கிறார்கள் என பார்த்தால், “இந்த மாதிரி டாக்ஸிக் ஆண்களை தான் ஆதரிக்கிறீங்கனா, யாரும் மாற்றமடைய மாட்டாங்க!, சினிமாவில் காதலா, ரியலா? சரியான மெசேஜ் இல்லையே, ராஷ்மிகா சொல்லற பதிலால் தான் இளம் பெண்கள் பாதிக்கப்படுறாங்க” என்று சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில், ராஷ்மிகாவை ஆதரித்து பலரும், "அவங்க open mind-ஆ பேசிருக்காங்க. இது ஒரு காதல் பார்வைதான், ஒருவரின் கருத்து மீதான தனிநபர் தாக்குதலா இது?” என்று அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, இதற்கு முந்தைய பல பேட்டிகளிலும் மனம் திறந்து பேசும் பழக்கத்துடன் இருக்கிறார். அதை பெரும்பாலும் ரசிகர்கள் விரும்பினாலும், சில நேரங்களில் அந்த நெகிழ்ச்சியான நேர்மையான பதில்கள் சமூக விமர்சனங்களுக்கு அவரை தள்ளி விடுகின்றன. இந்த சூழலில், ராஷ்மிகா மந்தனா போன்ற பிரபலங்களின் ஒரே ஒரு பேச்சும் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ரசிகர்கள் பலரின் ஆதரவும், சிலரின் விமர்சனங்களும் குவிந்த நிலையில், அனிமல் படத்தின் டாக்ஸிக் கதாபாத்திரம் பற்றிய அவரது கருத்து தற்போது இணையத்தில் பூதாகாரமாகியுள்ளது.

இது எதிர்காலத்தில் மேலும் பல சர்ச்சைகளை கிளப்புமா அல்லது சமாதானமாகிவிடுமா என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது என்பதால் சினிமா விமர்சகர்கள் தற்பொழுது பொறுமை காத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி ராஷ்மிகாவை கையில் பிடிக்க முடியாது..! மந்தனாவின் திணறடிக்கும் போஸ்டர் வைரல்..!