தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்று தான் “டியூட்”. குறிப்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், இளம் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் கதாநாயகனாக தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இளம் ஹீரோவாக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அவருடன் மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படி இருக்க “டியூட்” படம் வெளியான முதல் நாளிலிருந்தே திரையரங்குகள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் குவிந்தது. இளைய தலைமுறையினரிடையே இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் ஐந்து நாட்களிலேயே படம் சுமார் ரூ.95 கோடி வசூலித்துள்ளது. படக்குழுவினரின் மதிப்பீட்டுப்படி, படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த தமிழ் படங்களில் மிகப்பெரிய ஹிட் என இது கருதப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை நகரில் சிறப்பான நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் இயக்குனர் கீர்த்தீஸ்வரன், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர், மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழா ஆரம்பத்தில் ரசிகர்களுக்காக படத்தின் சிறப்பு வீடியோ மற்றும் பின்னணி காட்சிகள் திரையிடப்பட்டன. அதன் பின் ஒவ்வொருவரும் மேடையில் உரையாற்றினர். இந்த சூழலில் இவ்விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில், “இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து இப்படம் கிடைத்தது எனக்கு பெருமை. நான் எப்போதுமே ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும்போது ‘அப்பா, தாத்தா’ ரோல் என்று நினைத்து வெறும் துணை வேடம் போல பார்க்க மாட்டேன்.
அந்த கதாபாத்திரமே கதையின் நாயகன் ஆக வேண்டும் என்றால் தான் நான் ஏற்கிறேன். அதுபோல் தான் ‘காஞ்சனா’, ‘போர் தொழில்’, மற்றும் இப்போது ‘டியூட்’ படத்திலும் செய்திருக்கிறேன்.
இதையும் படிங்க: இன்று மாலை வரை காத்திருங்கள்..! வெளியாகிறது சண்முக பாண்டியனின் 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிள்..!

இந்த படத்தில் கீர்த்தீஸ்வரன் ஒரு அழகான சோஷியல் மெசேஜை மிகவும் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்த்தாலும் புதிதாக ஏதாவது தெரிகிறது. நீங்கள் திரையில் பார்த்தது கீர்த்தி உருவாக்கிய சரத்குமார் தான். மேலும் பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவரின் உணர்ச்சி வெளிப்பாடு இயல்பாகவும், மனதை நொந்தபடியும் இருந்தது. பிரதீப் ஒரு இளம் நடிகராக இருந்தாலும், அவரது மனநிலை பெரிய அளவில் உள்ளது. நடிகர்களின் பணியை மட்டும் அல்லாமல், ஒளிப்பதிவாளர் முதல் உதவி இயக்குனர் வரை அனைவரும் இணைந்து சிறப்பாக உழைத்துள்ளனர்.
இப்படம் ஒரு குழு வெற்றி” என்றார். இப்படத்திற்கான இசையை அமைத்தவர் சம்சிராஜ். அவரது பின்னணி இசை, படத்தின் உணர்ச்சி காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் கூறினர்.
பிரபலமான “Dude Anthem” பாடல் இளைய தலைமுறையினரின் ப்ளேலிஸ்ட்களில் டிரெண்டாகி வருகிறது. ஒளிப்பதிவு செய்தவர் திலீப் சுப்ரமணியம், எடிட்டிங் பணியை செய்தவர் ரூபன், கலை இயக்கம் சந்தோஷ் குமார். ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்தை உயர்த்தியுள்ளது என படக்குழு தெரிவித்தது. விழாவில் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் மேடையில் பேசுகையில், “எனது கதை மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும், எனது குழுவுக்கும் நன்றி. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி என இவர்களில்லாமல் இந்த படம் சாத்தியமாகாது. இந்தப் படம் காதல், குடும்பம், மற்றும் சமூகம் ஆகியவற்றை இணைக்கும் முயற்சி. இதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் நாங்கள் அனைவரும் பெருமையாக உள்ளோம்” என்றார். படம் வெளியான நாள்முதல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
இந்தப் படத்தின் வெற்றி சரத்குமாருக்கு ஒரு புதிய மைல் கல் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவரது நடிப்பு, உரையாடல் பாணி, மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் சிலர் “சரத்குமார் மீண்டும் ஜொலிக்கிறார்” என கூச்சலிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெலுங்கில் புஷ்பா, கெஜ்ரா போன்ற வெற்றி படங்களைத் தயாரித்திருந்தது. இப்போது “டியூட்” மூலம் தமிழ் சினிமாவிலும் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், “தமிழ் ரசிகர்கள் அளித்த பாசம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இப்படம் ஒரு வரலாற்று வெற்றியாக மாறும்” என்றனர். ஆகவே “டியூட்” படம் — காதல், உணர்ச்சி, மற்றும் சமூகச் செய்தி கலந்து உருவான ஒரு நவீன தமிழ் சினிமா. இது இளம் தலைமுறைக்கு ஒரு பிரதிபலிப்பு என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் சரத்குமார், பிரதீப், மமிதா, ரோகிணி ஆகியோரின் நடிப்பு, கீர்த்தீஸ்வரனின் கதை சொல்லும் பாணி, யதார்த்தமான இசை என இவை அனைத்தும் சேர்ந்து “டியூட்” படத்தை வெற்றி பட்டியலில் உயர்த்தியுள்ளன. இப்படியாக படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் இதை “2025-இன் சிறந்த படம்” எனப் புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காலம் மாறிப்போச்சு பிரதர்..! பிரபல சீரியலில் அதிரடியாக களமிறங்கும் பில்கேட்ஸ்..!