தமிழ் சினிமாவில் சமீப ஆண்டுகளில் பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகரித்து வரும் நிலையில், அந்த வரிசையில் தனித்துவமான முயற்சியாக வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சீனியர் நடிகை ராதிகா மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேஷன் இயக்கியுள்ளார். வழக்கமான குடும்ப மெலோடிராமாவைத் தாண்டி, கருப்பு நகைச்சுவை, சமூக கருத்து, பெண்ணியம் ஆகியவற்றை கலந்த ஒரு சாட்டை வடிவில் இந்த படம் உருவாகியுள்ளது.
படத்தில் ராதிகா ‘பவுனுதாயி’ என்ற வயதான தாய் கிழவி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து, தினமும் கடன் வசூலித்து, அனைவரையும் பயமுறுத்தி வாழும் கடினமான பெண். ஊரே அவர் எப்போது இறப்பார் என்று காத்திருக்கிறது என்ற வரியில் படத்தின் டோன் தெளிவாக தெரிகிறது. அவருக்கு மூன்று மகன்கள்—அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி—மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூன்று மகன்களும் அம்மா எப்போது இறப்பார், சொத்து எப்போது கிடைக்கும் என காத்திருக்க, மகள் மட்டும் கணவரை விட்டு அம்மாவுடன் வாழ்ந்து வருவது கதைக்கு உணர்ச்சி அடுக்கை சேர்க்கிறது.
கதை திருப்பம் எடுக்கும் தருணம் ராதிகாவின் உடல்நிலை மோசமடைந்து, இன்னும் இரண்டு நாட்களில் உயிரிழப்பார் என்ற செய்தி ஊரெங்கும் பரவும்போது. அப்போது தான் அவர் 160 பவுன் நகையை சேர்த்து வைத்திருப்பது மகன்களுக்கு தெரிய வருகிறது. சகோதரிக்கும் மாப்பிள்ளைக்கும் தெரியாமல் அந்த நகையை கைப்பற்ற மூன்று பேரும் திட்டமிடுகிறார்கள். அதன் பின் நிகழும் சதி, குழப்பம், நகைச்சுவை கலந்த சம்பவங்களே ‘தாய் கிழவி’யின் மையம்.
இதையும் படிங்க: பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

ராதிகா இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட, வாழ்ந்துள்ளார் என்பதே சரியான வர்ணனை. படம் முழுவதும் படுக்கையிலேயே இருக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும், கண்கள், முகபாவனை, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் திரையை ஆட்கொள்கிறார். ஊரில் அனைவரும் அவரைக் கண்டு தெறித்து ஓடும் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவரைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. பால சரவணன் தனது இயல்பான நகைச்சுவையால் கவர, அருள்தாஸ் தீவிரத்துடன் கூடிய பேராசைமிக்க மகனாக சிறப்பாகத் தோன்றுகிறார். சிங்கம்புலி கமல் ரசிகராக வரும் காட்சிகள், குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் பகுதிகளில் அவர் பாடும் பாடல்கள், திரையரங்கில் சரவெடி கொண்டாட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தில் வரும் துணை நடிகரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ராதிகா படுக்கையிலே இருப்பதால், “இனி என்ன?” என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அந்த நிலையைத் தாண்டி இயக்குநர் பெண்ணியம், சம உரிமை, சுயமரியாதை போன்ற கருத்துகளை கதைக்குள் இயல்பாக நுழைக்கிறார். கிளைமேக்ஸில் ராதிகா வாயிலாக வரும் வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகின்றன. “பெண் சும்மா இல்லாமல் ஏதாவது வேலை செய்ய வேண்டும்; அதுதான் அவளை கடைசி வரை காப்பாற்றும்; அதுதான் உண்மையான சுதந்திரம்” போன்ற வரிகள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மருத்துவமனை காட்சியில், வட இந்திய டாக்டர் ஒருவர் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் ஆங்கிலத்தில் பேசும் தருணத்தில், மூத்த டாக்டர் ஒருவர் “மற்றவர்களுக்கு தெரியாத மொழியில் பேசுவது பெருமை அல்ல; பைத்தியக்காரத்தனம்” என்று கண்டிக்கும் காட்சி சமூக செய்தியாக அமைகிறது. மொழி, அடையாளம், மரியாதை ஆகியவை பற்றிய கருத்தை எளிமையாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.
டெக்னிக்கல் அம்சங்களிலும் படம் குறையில்லை. ஒளிப்பதிவு அந்த ஊரின் மண் வாசனை, மக்கள், கலாச்சாரம் ஆகியவற்றை கண்முன் கொண்டு வருகிறது. இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா வழங்கிய பின்னணி இசை காட்சிகளின் உணர்ச்சியை பலப்படுத்துகிறது.
படத்தின் ‘க்ளாப்ஸ்’ பட்டியலில் முதன்மையாக வருவது கதைக்களமும், ராதிகா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும், தாக்கமுள்ள வசனங்களும் தான். ‘பல்ப்ஸ்’ எனக் கூற வேண்டுமெனில், முதல் பாதி கதைக்குள் முழுமையாக செல்வதற்கு சிறிது பொறுமை தேவைப்படுகிறது.

மொத்தத்தில், ‘தாய் கிழவி’ என்பது பெண்ணியம் பற்றி பேசும் படம் மட்டுமல்ல; அதை செயலில் காட்டும் முயற்சியாகவும் திகழ்கிறது. “பெண் என்று பேசினால் போதாது, ஜெயித்து காட்ட வேண்டும்” என்ற படத்தின் மையக் கருத்தை, படக்குழுவே தனது முதல் முயற்சியிலேயே நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு Birthday Cake-க்கின் விலை ரூ.16 கோடியா..! லெஜெண்ட் பட நடிகை செயலால் ஷாக்கில் ரசிகர்கள்..!