தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நேர்மையான பேச்சுகளின் மூலம் பலரது கவனத்தையும் அதிகம் பெற்ற நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது தனது மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ மூலம் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் புகழ்பெற்ற நடன இயக்குனரான 'ராபர்ட் மாஸ்டர்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் நவீனக் குடும்ப கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் மீதான விமர்சனங்கள் கலவையானவை என்றாலும், வனிதா மற்றும் ஜோவிகா இணைந்து உருவாக்கிய திரைப்படம் என்பதாலும் இவர்களது முயற்சிகளையும் திறையுலகம் வெகுவாக பாராட்டியது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில் உபயோகித்த பாடல், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவ ராத்திரி...’ என்ற பிரபலமான பாடல். இந்த பாடல், மாற்றியமைக்கப்பட்ட வடிவில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது, இளையராஜா தரப்பில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் தொடர்ச்சியாக, இசையமைப்பாளர் இளையராஜா, இந்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, படக்குழுவினருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். காப்புரிமை மீறுதல், அனுமதியின்றி இசையை திருப்பியமைத்து பயன்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், இளையராஜாவின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், "பாடலின் இசையும், அதன் சிந்தனையும் இளையராஜாவுக்கு சொந்தமானவை. அப்படி இருக்கும்பொழுது அவை எந்தவித அனுமதியும் இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுமல்லாது, இந்த பாடலின் உரிமையை மட்டுமல்லாமல், இளையராஜாவின் தனிப்பட்ட பெருமைக்கும் அவமதிப்புக்கும் காரணமாக இருக்கக்கூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப்பாடலால் அவரது பெயர் கெடும் எனக் கூறி, அந்த பாடலை உடனடியாக திரைப்படத்திலிருந்து நீக்க உத்தரவு வழங்குமாறு" கோரினர். அதே நேரத்தில், நடிகை வனிதா விஜயகுமாரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், "எங்கள் திரைப்படத்தில் அந்த பாடலை பயன்படுத்துவதற்கான உரிமையை நாங்கள் முறையாக 'சோனி மியூசிக்' நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளோம். சோனி மியூசிக், இளையராஜாவின் 4,850 பாடல்களை 'எக்கோ' நிறுவனத்திடம் இருந்து வாங்கி உரிமை பெற்றுள்ளது. எனவே, நாங்கள் சட்டப்படி உரிமை பெற்றுத்தான் பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்" என்று விளக்கமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வனிதா விஜயகுமாரை வம்பிழுத்த விமர்சகர்கள்..! "உன்னால முடிஞ்சா நிரூபி.. நான் சினிமா விட்டே போறேன்" என சவால்..!
மேலும், படத்தின் டைட்டில் கார்ட்களில் இருந்த இளையராஜா பெயரையும் தற்போது நீக்கியுள்ளதாகவும், அவரது பெயரை விளம்பரத்திற்காக உபயோகிக்கப்படவில்லை" என்பதையும் வலியுறுத்தினார். இரு தரப்புகளின் வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் பதிலளிக்க உத்தரவு வழங்கினார் நீதிபதி. இதன் காரணமாக, பாடல் உரிமை யாரிடம் உள்ளது, அந்த உரிமையை சட்டப்படி யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தவே இது அவசியமாகும் என்று நீதிபதி குறிப்பிட்டார். அதனையடுத்து, வழக்கின் தொடர்ந்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு திரையுலகத்தில் ஒரு முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பல படங்களில் பழைய பாடல்களை 'ரீமிக்ஸ்' செய்து பயன்படுத்துவது, மாற்றியமைத்து திரைப்படங்களில் சேர்ப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. ஆனால், இது தொடர்பாக உரிமம் பெற்றிருப்பது யார்? அவர்களிடம் அனுமதி பெறப்படுகிறதா? என்பது குறித்த உரையாடல் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள், தங்களது இசை அவர்களது கைவினையாக இருப்பதாலும், அவர்களது இசை முழுமையாக அவர்களுக்கே உரிமை வாய்ந்ததாக இருப்பதாலும், இது போன்ற சம்பவங்கள் அவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆகவே, ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பழைய பாடல் பயன்படுத்தப்பட்டதிலிருந்து உருவான இந்த வழக்கு, தமிழ் திரைப்படத் துறையில் காப்புரிமை, இசை உரிமை, படங்களில் பாட்டுப் பயன்பாடு குறித்து எழும் சட்டவியல் சிக்கல்களின் பிரச்சனைகளை வெளிச்சபடுத்தும் விதமாகமாறியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சோனி மியூசிக் தரப்பில் என்ன பதில் வருகிறது என்பதையும், நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்குகிறது என்பதையும் திரையுலகினர் மட்டுமல்ல, ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜா - வனிதா விஜயகுமார் பாட்டு விவகாரம்..! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பால் ஷாக்கில் இசைஞானி..!